March 25, 2023

சினிமா தியேட்டருக்குள் உணவுப் பண்டம் விவகாரம்! -ஐகோர்ட் நழுவல்

குழந்தைகளுக்கான தண்ணீர், வெந்நீர், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி கோரிய வழக்கொன்றில்  சினிமா தியேட்டர்கள் தனியாருக்கு சொந்தமானது என்பதால் அவர்களுக்கு உத்தரவிடுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல அனுமதி இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வெளி உணவுகளைத் திரையரங்குகளுக்கு எடுத்துச்செல்ல மகாராஷ்டிராவில், மாநில அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் தமிழ்வேந்தன் தாக்கல் செய்திருந்த மனுவில், “சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் உணவுப் பண்டங்களை கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். குழந்தைகளுக்கான தண்ணீர், வெந்நீர், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கூட கொண்டு செல்ல அனுமதியில்லை.  தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை மிகவும் அதிகம். எனவே, படம் பார்க்கச் செல்பவர்கள் தங்களுடன் அத்தியாவசிய தேவையான உணவுப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிடக்கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சினிமா தியேட்டர்களில் அத்தியாவசிய உணவு பண்டங்களை கொண்டு செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் திரையரங்களுக்கு உணவு மற்றும் குடிநீரை வெளியில் இருந்து எடுத்து செல்ல அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் பேட்டியளித்த தமிழக அமைச்சர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, ‘வெளியிலிருந்து கொண்டு செல்லும் உணவு பொருட்களை தடை செய்யக்கூடாது என்று ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்கள் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.