April 1, 2023

இத்தாலி நில நடுக்கத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லையாம்!

மத்திய இத்தாலியின் ரோம் நகரின் வட-கிழக்குப் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் சரியாக இன்று காலை 3.36 மணியளவில் நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் நகரங்களில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. நிலநடுக்கத்துக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இந்த நிலநடுக்கம் 20 நொடிகள் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இத்தாலியில் உள்ள இந்தியர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரோம் நகரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

itali aug 24

இன்று ஏற்பட்ட பூகம்பத்தால் ஆங்காங்கே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே அமாட்ரிஸ் நகரின் பாதி பகுதி முற்றிலும் அழிந்து விட்டது. ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ரோடுகள் துண்டானதால் மற்ற பகுதிகளுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அமாட்ரிஸ் நகர மேயர் செர்ஜியோ பிரோஷ்ஷி தெரிவித்துள்ளார்.

நகரில் எங்கு பார்த்தாலும் இடிபாடுகளாக காட்சியளிக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவிக்கின்றனர். ரோடுகள், பாலங்கள் இடிந்ததால் மீட்பு குழுவினர் உடனடியாக வருவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இன்று அமாட்ரிஸ் நகரில் ஏற்பட்ட பூகம்பம் கடுமையானது என இத்தாலி பொதுமக்கள் பாதுகாப்பு ஏஜென்சி அறிவித்துள்ளது. கடுமையான சேதங்கள் ஏற்பட்டதை உறுதி செய்துள்ளது. மேலும் 10 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணி நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.அமாட்ரிஸ் நகரம் மலைகள் சூழ்ந்துள்ள பகுதி. எனவே பூகம்பத்தின் போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மண் மற்றும் பாதைகள் வீடுகளின் மீது சூழ்ந்து கிடப்பதாகவும் அவற்றை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இத்தாலியில் கடந்த 2009-ம் ஆண்டில் அகுய்லா பகுதியில் 6.3 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது 300 பேர் பலியாகினர்.2012-ம் ஆண்டு மே மாதம் எமிலியா ரொமாக்னா பகுதியில் 10 நாட்கள் தொடர்ந்து ஏற்பட்ட நில நடுக்கத்தில் 23 பேர் உயிரிழந்தனர் 14 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது