அமெரிக்காவில் எச்1பி விசா விண்ணப்பிக்க புதிய முறை!
அமெரிக்காவில் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் தங்கி இருந்து வேலை பார்ப்பதற்கு வழங்கப்படுகிற விசா ‘எச்-1 பி’ விசா. அந்த வகையில் ஆண்டு தோறும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக் கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்ற 20 ஆயிரம் பேருக்கு கூடுதலாக இந்த விசா வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் எச்1பி விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு புதிய விதிமுறையைக் கொண்டுவரவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்பப் பணிகளுக்காக, வெளிநாட்டினரைப் பணிக்கு அமர்த்த ‘எச்1 பி’ விசா வழங்கப்படுகிறது. எச்-1 பி’ விசாக்களில் 70 சதவீதத்துக்கும் மேலாக இந்தியர்களே பெறுகிறார்கள். அதாவது ‘எச்-1 பி’ விசா மூலம் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் இந்தியர்களால் நடத்தப்படும் தொழில்நுட்ப நிறுவனங்களே அதிகம் பயன்பெறுகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், அமெரிக்காவின் உள்நாட்டு வேலைவாய்ப்பைப் பெருக்க இந்த எச்1 பி விசாவுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்து வந்தது.
இந்நிலையில், எச்1 பி விசாவைப் பெறுவதற்கு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அமெரிக்காவில் உயர் கல்வியைப் பெற்ற வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இதன்மூலம், எச்1 பி விசாவுக்கான விண்ணப்பங்கள் மின்னணு மூலம் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்மூலம், அமெரிக்காவில் உயர்கல்வி படித்தவர்கள் அதிக வாய்ப்புகளைப் பெற முடியும். அதாவது, 5,340 பேர் பயன் பெற முடியும் எனக் கருதப்படுகிறது.
இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவையின் இயக்குநர் பிரான்சிஸ் சிஸ்னா கூறுகையில், இது அமெரிக்காவில் முதுகலை அல்லது உயர்கல்வி பட்டம் பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் என்று தெரிவித்தார்.