September 20, 2021

“போராட்டங்கள் நாளை முதல் வலுப்பெறும்” – ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்!

ஜன.22 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், நாளை பணிக்கு திரும்ப வேண்டும்; இல்லையென்றால், அவர்களின் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக கருதப்பட்டு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என பள்ளிக் கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே சமயம் போராட்டங்கள் நாளை முதல் வலுப்பெறும்” என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ – ஜியோ அமைப்பை சேர்ந்த, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு திரும்பும்படி பல முறை அரசு உத்தரவிட்டும், போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கை விடவில்லை.

இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் ”போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை உடனடியாக கை விட்டு, நாளை பணிக்கு திரும்ப வேண்டும். நாளை பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்படும். அந்த பணியிடங்களில், 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்” என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், “தமிழக அரசின் எந்த எச்சரிக்கைக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம், போராட்டங்கள் நாளை முதல் வலுப்பெறும்” என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்