September 25, 2021

போலியோ சொட்டு மருந்து ஸ்டாக் இல்லை: – மத்திய அரசு அறிவிப்பு!

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் நாடு முழுவதும் ஒத்தி வைக்கப் படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சொட்டு மருந்து இருப்பில் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டுமருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. முதல் தவணையாக ஜனவரி மாதமும், 2வது தவணையாக பிப்ரவரி மாதமும் சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நாடு முழுவதும் நடத்துவதை மத்திய சுகாதாரத்துறை வழக்கமாக கொண்டுள்ளது.

இதன் படி நடப்பு ஆண்டில் வருகிற பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இந்த முகாம்கள் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பீகார், மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு வழங்குவதற்கு மட்டுமே சொட்டு மருந்து கையிருப்பில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சொட்டு மருந்து இருப்பில் இல்லாத நிலை உள்ளதால் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம்கள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.