கோடநாடு கொலைகள் விவகாரம் : சயன் & மனோஜ் கைது!

கோடநாடு கொலைகள் விவகாரம் : சயன் & மனோஜ் கைது!

கொடநாட்டில் அடுத்தடுத்து நடந்த விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த  விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரை தமிழக தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். இது வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. அந்த வீடியோவில்  கூலிப்படை தலைவன் சயான் கூறும்போது, ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காக இந்த வேலைகளை செய்கிறோம். பழனிசாமி, தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கனகராஜ் கூறியதால்தான் இந்த வேலை  களில்  நாங்கள் இறங்கினோம். ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு நடந்த விபத்தில் என் மனைவி, மகள் உயிரிழந்து விட்டனர். தற்போது இழப்பதற்கு எதுவும் இல்லை. இதனால் எல்லா தகவல் களையும் வெளிக்கொண்டு  வரவேண்டும்’ என்பதற்காக கூறுவதாக தெரிவித்திருந்தார். மேலும், இந்த மர்ம மரணங்கள் அனைத்தும் கொலைகள்தான் என்று கூறிய மேத்யூஸ், இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நேரடியாக  குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, தனக்கும் கோடநாடு விவகாரத்திற்கு சம்பந்தமில்லை என தெரிவித்தார். அத்துடன் தன் மீதும், அதிமுக ஆட்சி மீதும் அவதூறு பரப்ப சிலர் பின்புலத்தில் இருந்து அரசியல் காரணங்களுக்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறினார். அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனிப்படை அமைத்து விசாரிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து, டெல்லி சென்ற தனிப்படை போலீசார், நேற்று சம்பந்தப்பட்ட நபர்கள் 4 பேரையும் டெல்லி போலீசார் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கி டையே ேநற்று மதியம் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கூலிப்படை தலைவர் சயான், மனோஜ் ஆகியோர் துவாரகா செக்டார் 9வது பகுதியில் தனியார் விடுதி முன்பு நிருபர்களை சந்தித்து மீண்டும்  எடப்பாடி பழனிசாமி மீது பரபரப்பு குற்றம் சாட்டினர். மேத்யூஸ் பேட்டி கொடுத்து, அரை மணி நேரத்துக்கு பின் சென்னையில் இருந்த சென்ற துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் இன்னோவா காரில் வந்து அதிரடியாக  கூலிப்படை தலைவன் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை தனியார் விடுதியில் தங்கி இருந்த போது சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் அங்கிருந்து தப்பி  விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கைது செய்யப்பட்ட இருவரையும் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.

error: Content is protected !!