August 14, 2022

கொடநாடு மர்மக் கொலைகள் : எடப்பாடி மீது பழி! – வீடியோ ஆதாரம்!!

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் எப்படி சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கிறார்களோ அதைப் போல, அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களில் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி சந்தேகக் கணைகள் பாய்ந்துள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர் மீது கொலைப்பழி விழுந்துள்ளது. “தெகல்கா “இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ தனது புலனாய்வு முயற்சியால் திரட்டி உள்ள தகவல்களை டெல்லியில் வெளியிட்டுள்ளார். அதில் உள்ள தகவல்கள் அதிர்ச்சிக் குரியதாக உள்ளன” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.  இங்கு காவலாளியாக பணியாற்றிய ஓம்பகதூரை படுகொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் புகுந்து ஜெயலலிதாவுக்கு சொந்தமான 5 கைக்கெடிகாரங்கள், பளிங்கு கற்களால் ஆன அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளை அடித்து சென்றது என போலீஸ் 2017 ஏப்ரலில் தெரிவித்தது. அதையொட்டி கைது செய்யப்பட்ட ஜெயலலிதா வின் முன்னாள் டிரைவர் கனகராஜ், விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது குடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்கு உள்ளானதில், அவரின் மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். சயான் உயிர் பிழைத்தார். இவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார், தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் பல காலமாக வாய் திறக்க மறுத்து வந்த சயான், தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறி உள்ளார். இவ்விவகாரம் குறித்து தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கொட நாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கான பின்னணி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பேசிய போது, “கொடநாட்டில் நடந்த கொலைக்கான பின்னணி தகவல்களை சேகரித்துள்ளேன். இதன் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கொட நாடு எஸ்டேட்டில் கொள்ளை நடத்தியவர்களிடம் பேசிய ஆதாரங்களையும் வைத்துள்ளேன். எஸ்டேட் டில் உள்ள கட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆவணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றை கைப்பற்றவே இந்தக் கொள்ளை நடந்துள்ளது. இதில் எடப்பாடியின் சதி அடங்கி இருக்கிறது’’என அவர் தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?time_continue=2&v=42TC9WEj9bk

மேலும் , கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளையில் ஈடுபட்ட சயோன் உள்ளிட்ட இருவரையும் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி பேச வைத்தார் மேத்யூ. அப்போது பேசிய சயோன், ’’2017ல் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சில ஆவணங்களை கேட்டு அனுப்பியதாக டிரைவர் கனகராஜ் தெரிவித்தார். அதனை முதல்வரிடம் கொடுக்க வேண்டும் கனராஜ் என்னிடம் கேட்டார். கொடநாடு எஸ்டேட்டில் டிரைவராக இருந்த கனகராஜ் எனக்கு 5 ஆண்டுகளாக என்னிடம் பழகி வந்தார். அப்போது என்னை அணுகிய அவர், ’கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கியமான டாக்குமெண்டுகளை எடுக்க வேண்டும் முதல்வர் பழனிசாமி கேட்டுள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கு எனக்கு உதவ வேண்டும்’ எனக் கேட்டார் கனகராஜ். அதன்படி நாங்கள் அந்த டாக்குமெண்டுகளை எடுக்க உதவுவதாக கூறினோம். இதற்காக கேரளாவில் இருந்து 10 பேரும், டிரைவர் கனகராஜும் எஸ்டேட்டுக்குள் நுழைந்தோம். அப்போது சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாது என கனகராஜ் கூறினார். இதை நம்பி எஸ்டேட்டுக்குள் நுழைய முயன்றபோது காவலாளி ஓம்பிரகாஷ் தடுத்தார்.

அவர் கூச்சல் போட்டு விடக்கூடாது என்பதற்காக கைகால்களைக் கட்டி வாயை மூடினோம். ஆனால் அவர் மூச்சு முட்டி இறந்து விட்டார். அவரை கொல்ல வேண்டும் என இதை செய்ய வில்லை. பின்னர் உள்ளே நுழைந்து கனகராஜ் கட்டடத்திற்குள் இருந்த முக்கிய ஆவணங்களை கனகராஜ் அள்ளி வந்தார். அதை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்போவதாக சொல்லிச் சென்ற அவர் அடுத்த 5 நாட்களில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி பலியாகி விட்டார்.

நாகராஜ் கொல்லப்பட்டதில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருக்கிறது. ஆனால், எடப்பாடி கொடுப்பதாக சொன்ன அந்த 5 கோடி ரூபாய் பணம் எங்களுக்கு வந்து சேரவில்லை. பிறகு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றோம். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு தொடர்பு இருக்கிறது’’ என்று அவர் தெரிவித்தார்

இது, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம்கூட நீடிக்கக் கூடாது’ என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இவ் விவகாரத்தை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ள எண்ணாமல், மத்திய அரசு சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஆனல் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது. முதல்வருக்கு கெட்டபெயரை ஏற்படுத்த உள் நோக்கோடு சதி அரங்கேறியிருக்கிறது. கொடநாடு விவகாரம் பற்றி வெளியானதகவல்கள் அனைத்தும் கற்பனையே. கொடநாடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, பிரச்னை எழுப்ப காரணம் என்ன? காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வதந்தியை பரப்பியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் முயற்சிக்கு யாரும் துணை போகக்கூடாது”என்வும் தெரிவித்தார்.