September 20, 2021

நம்ம நாட்டில் போன 5 வருடத்தில் 586 ரயில் விபத்துகள்!

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 586 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. அதில் 53 சதவீத விபத்துகள் ரயில் தடம் புரண்டதால் நிகழ்ந்துள்ளன. இதில் இறுதி விபத்தாக உத்தரப்பிரதேசத்தில் நேற்று உட்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட விபத்து அமைந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நவம்பரில் இருந்து இதுவரை ரயில் தடம் புரண்டு 20 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில் பெரும்பான்மையானவை லேசான விபத்துகள் தான்.

உயிர்ச்சேதம் ஏற்படுத்திய விபத்துகள்

2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்தது சமீபகாலத்தில் மிக மோசமான விபத்தாகும். இந்த விபத்தில் 150 பேர் பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

2015 செப்டம்பர் 12ம் தேதி கல்கா-ஷிம்லா ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர்.
அதே நாள் கர்நாடகாவின் கல்புர்கி நகரில் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 2 பேர் இறந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

2015 ஆகஸ்டு 4ம் தேதி மத்தியப்பிரதேசத்தில் காமயானி எக்ஸ்பிரஸ் மற்றும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மொத்தம் 31 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

2015 மே 25ம் தேதி உத்தரப்பிரதேசம் கௌஷாம்பி மாவட்டத்தில் ரோர்கேலா-ஜம்மு தாவி மூரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

2015 மார்ச் 20ம் தேதி டேராடூனட-வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதில் 58 பேர் இறந்தனர். 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

2015 பிப்ரவரி 13ம் தேதி பெங்களூருவில் பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் பலியாகினர். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.