December 1, 2021

சமீபத்தில் Hangouts-ஐ இழுத்து மூடப்போவதாக அறிவித்த கூகுள் தற்போது தனது புதிய அறிமுகமான RCS மெசேஜிங் சேவையை பிரபலமாக்க முயற்சித்து வருகிறது.

பயனாளர்களுக்கு எப்போதும் தொலைநோக்குப் பார்வையுடன் ஆராய்ந்து புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் கூகுள் தற்போது RCS என்னும் ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ் மெசேஜிங் சேவை மீது கவனம் பதித்துள்ளது. கடந்த 2013- ஆண்டு சாட் செய்யும் ஆப் ஆக அறிமுகமானது கூகுளின் Hangouts. அதைத் தொடர்ந்து ‘கூகுள் டாக்’ அல்லது ‘GChat’ என்ற ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து ஒரே ஆப் மூலம் பலதரப்பட்ட சேவைகளை வழங்க விரும்பிய கூகுள், Allo மற்றும் Duo ஆகிய இரண்டு ஆப் 2016-ம் ஆண்டு கூகுள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஸ்மார்ட் மெசேஜிங் ஆப் ஆகக் கருதப்பட்ட கூகுள் Allo-வில் மேலும் மேலும் அப்டேட்களை செய்து அசர வைத்தது கூகுள்.

வீடியோ காலிங் அம்சத்தை முதன்மையாகக் கொண்ட கூகுள் Duo பயனாளர்களின் செல்போன் சிக்னல் பிரச்னையால் நிறைய சிக்கல்களை சந்தித்தாலும் பலராலும் பயன்படுத்தப்பட்ட ஆப் ஆக இருந்தது.

தற்போது கடந்த கால மெசேஜிங் சேவைகளை எல்லாம் வெறுமனே அப்டேட் செய்வதை விடுத்து புதிதாக வருங்காலத்துக்கான மெசேஜிங் ஆப் உருவாக்கப்பட வேண்டும் என RCS மெசேஜிங் சேவையை கூர்தீட்டத் தொடங்கியுள்ளது கூகுள். போன நூற்றாண்டில் அறிமுகமான SMS/MMS சேவை தான் வருங்கால RCS சேவையாக மெருகேற்றியுள்ளது கூகுள்.

SMS முறையில் வாட்ஸ்அப் சேவைகள் அனைத்தையும் உள்ளடக்கி கூடுதலாக பிசினஸ் மெசேஞ் அம்சமும் RCS-ல் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றதாக உள்ள RCS விரைவில் ஆன்ட்ராய்டு வெர்ஷன் மூலம் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆப்பிள் வெர்ஷனில் RCS வெளியாகுமா என்பது குறித்து இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை.