November 28, 2021

சர்க்கஸில் எந்த மிருகங்களையும் பயன்படுத்தக் கூடாது! – மத்திய அரசின் புதிய தடை!?

சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளில் சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளை பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. குதிரை, குரங்கு, யானை, நாய்கள் உள்ளிட்ட விலங்குகளைப் பயன் படுத்தவும் தற்போது தடை கொண்டுவரப்படவுள்ளது. நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் விலங்கு களுக்குப் பயிற்சி அளிக்கும்போது, அவை பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. அதனால், எந்த ஒரு  விலங்குகளையும் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மத்திய அரசு இது குறித்து  ஆலோசனை நடத்தி வருகிறது. நவம்பர் 28ஆம் தேதியிடப்பட்ட சட்ட வரைவு அறிக்கையில், இது குறித்து 30 நாட்களுக் குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் சினிமாதான் 1960 70ம் ஆண்டுகளில் முக்கிய பொழுதுபோக்காகத் திகழ்ந்தது. சாதார ணமாகச் சிறுவர் சிறுமியரைச் சினிமாக்களுக்கு அழைத்துப் போகும் வழக்கம் கிடையாது. கிரேட் ஈஸ்டர்ன் சர்க்கஸ், கமலா த்ரீ ரிங் சர்க்கஸ் போன்ற கம்பெனிகள் ஊர் ஊராக வருவார்கள். மூன்று நான்கு வாரங்கள் காட்சிகள் நடத்துவார்கள். சிறுவர் சிறுமியர் இதற்காகவே காத்திருப்பார்கள். கூட்டம் அலைமோதும்.

யானைகள் கால்பந்து விளையாடும்; ரிங் மாஸ்டர் சவுக்கைச் சொடுக்குவார். சிங்கங்கள் சாதுவாகச் சொன்னதைக் கேட்கும்: குரங்குகள் சைக்கிளில் வித்தைகள் காட்டும்: விளக்கை அணைப்பார்கள். சர்க்கஸ் அரங்கம் முழுக்கக் கும்மிருட்டு. ஒரு பெரிய உருண்டைக்குள் மட்டும் கலர் கலராய் விளக்குகள் கண் சிமிட்டும். ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த உருண்டைக்குள் நுழைவார். அதற்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவார். நம் நெஞ்சு படபடக்கும். ட்ரப்பீஸ் விளை யாட்டும் இப்படித்தான். அந்தரத்தில் ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் தாவிப் பிடிப்பார் கள். மாஜிக் காட்டுபவர் வருவார். காலி தொப்பியைக் காட்டுவார். “சூ மந்திரக் காளி” என்று என்று சொல்லுவார். காலி தொப்பிக்குள்ளிருந்து முயல் குட்டி குதித்து வரும். இவை அனைத்துக்கும் மேலாகச் சர்க்கஸ் கோமாளிகள். உருவத்தில் குள்ளமாக இருக்கும் இவர்கள் சகலகலா வல்லவர் கள். இவர் களைப் பார்த்தாலே அரங்கம் அதிரும்.

1980 – களில் சமுதாய வாழ்க் கையில் முக்கிய மாற்றங்கள் வந்தன. தொலைக்காட்சியும், கம்ப் யூட்டரும், பொழுதுபோக்கைத் தேடி நாம் போகவேண்டிய தேவை இல்லாமல், அவற்றை நம் வீடுகளுக்குக் கொண்டுவந்தன. அம்மா, அப்பாக்கள் வீடுகளில் தொலைக்காட்சிகளில் சினிமாக்கள், சீரியல்கள் பார்க்கத் தொடங்கினார்கள். சிறுவர் சிறுமியருக்குக் கார்ட்டூன்கள், கிரிக்கெட் மாட்ச்கள். அதிலும் கம்ப்யூட்டர்,செல்போன்கள் ஆகிய கருவிகளில் பெரியவர்கள் ஈ மெயில், மெஸேஜிங், வெப் ஸர்ஃபிங் என்று நேரம் செலவிடுகிறார்கள். சிறுவர் சிறுமியரை வீடியோ கேம்ஸ் கட்டிப்போட்டு வைக்கின்றன. ஆகவே, குழந்தைகளுக்கு சர்க்கஸ் பார்க்கும் ஈடுபாடு குறைந்து விட்டது.

அதே சமயம் சர்க்கஸில் மிருகங்களைக் கொடு மைப்படுத்துவதாகச் சமூகநல ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால், மிருகங்களை வைத்துச் செய்யும் விளையாட்டுகளின்மீது அரசாங்க, நீதிமன்றக் கட்டுப்பாடுகள் வந்தன. இந்த வரைமுறைகளால், மிருகங்கள் பங்கெடுக்கும் விளை யாட்டுக்கள் சுவாரஸ்யம் இழந்தன. மக்கள் சர்க்கஸுக்கு வர இந்த விளையாட்டுக்கள் முக்கிய காரணம். வீட்டுக்கே வந்த பொழுதுபோக்குகள், ஷோக்களின் சுவாரஸ்யக் குறைவு ஆகிய இரண்டு முக்கிய காரணங்களால், சர்க்கஸுக்கு வருபவர்கள் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்தது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க சர்க்கஸ் கம்பெனிகளின் கதை இதுதான். சர்க்கஸின் வெற்றிக்குக் காரணம் மிருக விளையாட்டுக்கள், வீர தீர ஆட்டங்கள், கோமாளிகளின் காமெடி. 1980 வரை சர்க்கஸ் கம்பெனிகளும், கழைக் கூத்தாடிகளும் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தார்கள். ஆகவே, பிசினஸ் லாபகரமாக நடந்தது. 1980-களில், தொலைக்காட்சியும், கம்ப்யூட்டரும் இந்தப் பின்புலத்தை முழுமையாக மாற்றிவிட்டன.

இந்நிலையில் வனவிலங்குகளை கூண்டில் அடைத்து சித்ரவதை செய்யக்கூடாது என பல விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அது தொடர்ந்து வலுப்பெற்றதால், வனவிலங்குகளை கூண்டில் வைத்து சர்க்கஸ் காட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நாய், யானை, குதிரை மற்றும் கிளிகளை வைத்து மட்டுமே பல இடங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிறகு அதையும் தடைசெய்யக்கோரி விலங்கினங்கள் பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வருந்தனர். இதற்காக மத்திய அரசு புதிதாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் மிருகங்களை காட்சி பொருளாகவோ, சித்ரவதை செய்து துன்புறுத்துவதை தடை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை உடனடியாக சர்க்கஸிலும் அமல்படுத்த வேண்டும் என மிருகங்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதையேற்று மத்திய அரசு 2001இல் கொண்டு வந்த காட்சிப்படுத்தும் விலங்குகள் பதிவு விதிகள் 13ன் கீழ் புதிதாக 13A சேர்க்கப்படவுள்ளது. அதன்படி, விலங்குகளுக்கு நிகழ்ச்சிக்காக பயிற்சி அளிக்கவோ, அவற்றைக் காட்சிப்படுத்தவோ கூடாது. சர்க்கஸ் அல்லது மொபைல் பொழுது போக்கு போன்ற நிகழ்ச்சிகளில் கண்காட்சிக்காக எந்த விலங்குகளையும் பயன்படுத்தக் கூடாது என இந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கஸில் விலங்குகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முடிவு, ஏற்கனவே வளர்ச்சி அடைந்த சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் தற்போதைய முடிவின் மூலமாக, அந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துவிடும். “அறிவார்ந்த மற்றும் உணர்திறன் கொண்ட மிருகங்களை நம்முடைய பொழுதுபோக்கிற்காக அடிமைப்படுத்துவதையும் துன்புறுத்துவதையும் நிறுத்தும் நேரம் வந்துள்ளது” என்று கூறியுள்ளார் பீட்டா அமைப்பின் தலைமை அதிகாரி மணிலால் வலியேட்.

நம் நாட்டைப் பொறுத்த வரை கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் மட்டும் தான் சர்க்கஸ் கலைஞர்கள் அதிகம். இப்போது சர்க்கஸுக்கு போதிய வரவேற்போ, வருமானமோ இல்லாததால், சர்க்கஸ் கலைஞர்கள் பலர் ஏற்கனவே சினிமாக்களில் ஸ்டெண்ட் கலைஞர்களாகவும், அடிப்படை பணியாளர்களாகவும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த புதிய உத்தரவு அமல் படுத்தப்பட்டால், மேலும் சிலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்பதுதான் கவலை தரும் விஷயம்!