December 8, 2021

தூத்துக்குடி: 13 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல்துறை & வருவாய் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு!

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் உற்பத்தியை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் கருதும் பட்சத்தில், நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கலாம் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள நிலையில் இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த மே மாதம் 22ஆம் தேதியன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தின் 100ஆவது நாளில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நடவடிக்கை குறித்து திமுக தலைமையில் அரசியல் எதிர்க் கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று போலீஸ் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.

இவ்விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளரான கே.அர்ஜுனன் அக்டோபர் 8ஆம் தேதியன்று புகாரளித்திருந்தார். இதன் அடிப்படையில் அடையாளம் தெரியாத காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அர்ஜுனன் தனது புகாரில் தெரிவித்திருந்த பெரும்பாலான பிரச்சினைகளை சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவியல் சதித்திட்டம், மக்களுக்கு கேடு ஏற்படும் வகையில் அரசு அதிகாரிகள் சட்டத்துக்கு கீழ்ப்படியாதது, கேடு விளைவிப்பதற்காக தவறான ஆவணங்களை உருவாக்கியது, கொள்ளை, வழிப்பறி, குற்றவியல் அச்சுறுத்தல் போன்றவற் றுக்காக அதிகாரிகள் மீது சிபிஐ புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.