March 27, 2023

இலங்கை நாடாளுமன்றதில் ராஜபக்‌ஷே அணியினர் மிளகாய்பொடி கரைசல் வீசி அட்டகாசம்! –

இலங்கையில் அன்றாடம் நடக்கும் பல்வேறு விஷயங்கள் சர்வதேச அளவில் பலரின், வெறுப்பை யும்  அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இன்று கூடிய நாடாளுமன்ற கூடத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள்  அவை காவலர்கள் மீது மிளகாய் பொடி அடித்து அட்டகாசம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

முன்னதாக நேற்று மாலை ஐக்கிய தேசியக் கூட்டணித் தலைவர்களோடு ஆலோசித்த அதிபர் சிறிசேனா, “புதிய நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அவையில் கொண்டுவாருங்கள். ஏற்கனவே கொண்டுவந்ததில் அதிபரின் செயல் சட்டவிரோதமானது என்பதை நீக்கிவிட்டு ராஜபக்‌ஷேவின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவாருங்கள்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அதை ஏற்று இன்று மதியம் 1.30க்கு அவை கூடுகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் 1.15 மணியளவிலேயே அவையில் நுழையத் தொடங்கினர். நேற்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் இருவர் கத்தியோடு அவையில் நுழைந்ததால் உஷார் ஆகி, ஒவ்வொரு எம்.பி.யையும் போலீசார் முழு சோதனைக்கு உட்படுத்தியே அவைக்குள் அனுப்பினர்.

உள்ளே சென்ற கொஞ்ச நேரத்தில் சபாநாயகரின் இருக்கையைச் சுற்றி ஆக்கிரமித்த ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் நேற்று கத்தியோடு வந்த ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பத் தொடங்கினர். அப்போது சபாநாயகர் அவைக்கு வந்திருக்கவில்லை.

மதியம் 1.50 மணிக்கு ராஜபக்‌ஷே கட்சி எம்.பி. அருந்திகா ஃபெர்னாண்டோ திடீரென ஏறி சபா நாயகரின் இருக்கையில் அமர்ந்துவிட்டார். அவரைச் சுற்றி மற்ற ஆதரவு எம்.பி.க்கள் சூழ்ந்து நின்றனர். இந்தத் தகவல் தனது அறையில் இருந்த சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவை முறைப்படி தொடங்கப்படாத நிலையிலேயே அவைக்குள் சென்று சத்தமிட்டு, சபாநாயகரின் இருக்கையிலும் அமர்ந்துவிட்டனர் ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள். இதனால் சபாநாயகர் போலீஸ் பாதுகாப்புடன் 2.35 மணிக்கே நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

சபாநாயகர் கரு ஜெயசூர்யா அவைக்குள் போலீஸாருடன் நுழையும்போதே ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் அவரை எதிர்த்துக் கடுமையான முழக்கங்களை எழுப்பினர். அவரது இருக்கையில் அமரவும் அவர்கள் அனுமதிக்கவில்லை. இது இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை நிகழாத கொடுமை என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்.

வெகுநேரமாக தனது இருக்கை தனக்கு அளிக்கப்படாத நிலையில் தற்காலிக மேஜை ஒன்றை அமைத்து அதில் அமர்ந்து சபையை நடத்த ஆரம்பித்தார் சபாநாயகர் கரு ஜெயசூர்யா.

அதிபர் நேற்று அறிவுறுத்தியபடி பிரதமர் ராஜபக்‌ஷே அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீண்டும் இன்று சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஒவ்வொருவர் பெயராக அறிவித்து ஓட்டெடுப்பு நடத்த சபாநாயகர் முயன்றார். ஆனால் அதற்கு ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து இரைச்சல் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இதனால் குரல் வாக்கெடுப்பு நடத்தினார் சபாநாயகர். இதன் மூலம் மீண்டும் ராஜபக்‌ஷே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இது நடந்துகொண்டிருக்கும்போதே ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் இன்று மிளகாய் பொடியை தண்ணீரில் குழைத்து சபாநாயகர், அவருக்கு பாதுகாப்பாக வந்த போலீசார், ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் ஆகியோர் மீது வீசினார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான காமினி ஜெயவிக்ரம பெரேரா மிளகாய் பொடி கலந்த தண்ணீர் வீசப்பட்டதால் கண்ணெரிச்சலுக்கு ஆளாகி, “சிறிசேனா… இதுதான் உங்கள் ஜனநாயகமா?” என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பினார். இவரைப் போல மற்ற எம்.பி.க்களும் போலீசாரும் மிளகாய் பொடி வீச்சுக்கு ஆளாகி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ட சபாநாயகர் கரு. ஜெயசூர்யா கடுமையான வேதனை அடைந்தார். அந்த இரைச்சலுக்கு இடையிலும், “மகிந்த ராஜப க்ஷே அரசுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் இனி நவம்பர் 19 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குக் கூடும்” என்று அறிவித்து கண்களைக் கசக்கிக் கொண்டே மீண்டும் போலீஸ் பாதுகாப்போடு வெளியேறினார்

.

சபாநாயகர் புறப்பட்ட சில மணித்துளிகளில் சபாநாயகரின் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகச் செய்தியில், “பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்‌ஷேவுக்கும் அவரது அரசுக்கும் பெரும்பான்மை இல்லை என்பது நாடாளுமன்றத்தில் இன்றும் நிரூபிக்கப்பட்டது. ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராக வாக்களித்த 122 எம்.பி.க்களின் பெயர் பட்டியல் அதிபர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவருமான சம்பந்தன், “இன்றோடு 2 முறை ராஜபக்‌ஷே அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ராஜபக்‌ஷே தனது பதவியை இழந்துவிட்டார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமலும்,நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாது இது சட்டத்திற்கும்,நாட்டின் இறைமைக்கும்,ஜனநாயகத்துக்கும் முரணானது” என்று தெரிவிதுள்ளார்.