March 26, 2023

”முட்டாள் இல்லை இந்த ரஜினி காந்த்” – சூப்பர் ஸ்டார் ஆவேசம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் குறித்து தெரியாத அளவுக்கு தான் முட்டாள் அல்ல என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (செவ்வாய்க் கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் குறித்து ரஜினிகாந்துக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாயையை சில பேர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் கள். எனக்குத் தெரியும் என்றால் தெரியும் என சொல்கிறேன். தெரியாது என்றால் தெரியாது என சொல்கிறேன். அதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் கிடையாது. அன்றைக்குக் கேட்ட கேள்வி தெளிவாக இல்லை.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் என்று சொல்லியிருந்தால் எனக்கு புரிந்திருக்கும். எடுத்த எடுப்பிலேயே, ஏழு பேர் என்று கேட்டால் எந்த ஏழு பேர் என்று கேட்பது இயற்கைதானே. அதற்காக அந்த 7 பேரை தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை இந்த ரஜினி காந்த். பேரறிவாளன் பரோலில் வெளிவந்தபோது போனில் 10 நிமிடத்திற்கு மேல் பேசி அவருக்கு ஆறுதல் சொல்லியவன் இந்த ரஜினிகாந்த்.

இந்த வழக்கு நீதிமன்றம், மத்திய அரசு, குடியரசு தலைவர் என பல இடங்களுக்கு சென்றுள்ளது. இப்போது அந்த மனு கவர்னரிடம் உள்ளது. கவர்னர் அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். 27 ஆண்டுகள் அவர்கள் தண்டனை அனுபவித்து விட்டார்கள். போதும். மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே என் கருத்து.

இன்னொன்று பாஜக ஆபத்தான கட்சியா என்று கேட்கிறார்கள். எதிர்கட்சிகள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், பாஜக எதிர்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சிதானே. அது ஆபத்தான கட்சியா என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள். நேற்றைய என் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு அவர் பதிலளித்தார்.

பாஜக ஆபத்தான கட்சியா என்பது குறித்து ரஜினிகாந்தின் கருத்து என்ன?

நான் இன்னும் அரசியலில் முழுமையாக இறங்கவில்லை அதனால், நான் இப்போது சொல்ல முடியாது. மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். கட்சியை தொடங்குவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன.

பாஜகவுக்கு எதிரான மகா கூட்டணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

10  பேர் ஒருத்தரை எதிர்த்தால் யார் பலசாலி? அந்த 10 பேரா? அல்லது 10 பேரும் சேர்ந்து எதிர்க்கும் அந்த ஒருவரா? நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

நரேந்திரமோடி பலசாலி என சொல்ல வருகிறீர்களா?

இதைவிட தெளிவாக சொல்ல முடியாது. தேர்தலில் தான் தெரியும்.பாஜகவுடன் கூட்டணி வைப்பதா என்பது பற்றி அப்போது பார்க்கலாம்.

ஜெயலலிதா இறந்த பின்னர் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டதாக அமைச்சர்கள் சொல்கிறார்களே?

அவர்கள் நல்ல பதவியில் இருக்கின்றனர். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். நான் அதே கேள்வியைக் கேட்டால் நன்றாக இருக்குமா?

சர்கார் சர்ச்சையில் அதிமுகவினரின் செயல்பாடுகுகள் குறித்து?

நான் கடுமையாக கண்டிக்கிறேன். அது வன்முறை. முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எடுத்த எடுப்பிலேயே பேனரை கிழிப்பது, படத்தை நிறுத்துவது சரியல்ல.

நடிகர்கள் மக்களுக்கு எதுவும் நல்லது செய்யவில்லை என்று கூறுகிறார்களே?

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். வரி செலுத்துகிறோம்.

இலவசங்கள் குறித்து உங்கள் கருத்து?

இலவசங்கள் 100 சதவீதம் தேவை. யாருக்காக, எதற்காக கொடுக்கிறோம் என்பது முக்கியம். ஓட்டுக்காக கொடுப்பது சரியல்ல.

இலவசங்கள் பிச்சைக்காரர்களுக்குத் தான் தேவை என கமல்ஹாசன் கூறியுள்ளது குறித்து…

அவர் கருத்து குறித்து நான் சொல்ல முடியாது.

2.0 படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?

அதை கர்நாடகாவில் பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு ரஜினி காந்த் கூறினார்.