நேரம் காலம் இல்லாமல் பட்டாசு வெடித்த ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு!
ஒரு வழியாக கடந்து செல்லும் தீபாவளி பண்டிகையாகிய இன்று (நவம்பர் 6) உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்ததற்காக தமிழகம் முழுதும் சுமார் ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்களில் தெரிவித்தார்கள்.
காற்று மாசுபாட்டைக் குறைக்க தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டுமென்ற பொது நல வழக்கின்மீது கடந்த மாதம், ‘தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஒட்டி தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் பரம்பரை பரம்பரையாக தொடரும் பட்டாசுப் பழக்கத்தை கைவிட முடியாமல் இன்று தீபாவளியன்று பலரும் உச்ச நீதிமன்றத்தின் நேர வரையறை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் பட்டாசுகளை வெடித்துத் தீர்த்தனர். இந்த நிலையில் நாம் முன்னரே குறிப்பிட்டதுபோல டிஜிபி அலுவலக உத்தரவின் பேரில் போலீசார் பட்டாசு வெடிப்போரையும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று மதியம் டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட எஸ்.பி. அலுவலகங்களும், மாநகராட்சி காவல் ஆணையர் அலுவலகங்களுக்கும் பட்டாசு நேரக் கட்டுப்பாடு மீறி வெடித்தோர் மீதான வழக்கு விவரங்களை மாலை ஆறு மணிக்குள் அனுப்புமாறு வாய்மொழி உத்தரவு பறந்தது.
அதையடுத்து இன்று காலை 7 மணிக்கு மேல் பட்டாசு வெடித்தோர் மீதான வழக்கு விவரங்கள் டிஜிபி அலுவலகத்துக்கு குவிந்து வருகின்றன. இதன்படி சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பட்டாசு வெடித்தோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலையத்தில் க்ரைம் எண் 620/2018, 621/2018 உள்ளிட்ட நான்கு எஃப்.ஐ.ஆர்.கள் நேர வரையறை தாண்டி பட்டாசு வெடித்தோர் மீது பதிவு செய்யப் பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 30 பேருக்கு மேல் வழக்குப் பதிவுக்கு ஆளாகியுள்ளனர். நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில் 13 பேர் மீதும், கோவையில் 30 பேர் மீதும், திருப்பூரில் 40 பேர் மீதும் என தமிழகம் முழுதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.