ஐயப்பன் கோயில் இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல! – கேரளா ஐகோர்ட்
சமீப காலமாக தலைப்பு செய்திகாளில் தொடர்ந்து இடம் பெறும் சபரிமலை ஐயப்பன் கோயில் இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல, நம்பிக்கையுடைய அனைவரையும் வரவேற்கும் பாரம்பரியம் கொண்டது என்று கேரள ஐகோர்ட் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
பாஜக பிரமுகரும், இந்துமத ஆர்வலருமான டி.ஜி.மோகன் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அம் மனுவில் அடுத்த மாதம் கேரளாவில் மண்டல பூஜைதொடங்கி விடும்.
அப்போது பக்தர்களைத் தவிர வேறு யாரும் கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும். மேலும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து இந்துக்கள் அல்லாதவர்களும், சில வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களும் கோயிலுக்குள் வருவதைத் தடை செய்ய வேண்டும். அதற்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
அத்துடன் , 4 பெண்கள் தனியாக தாக்கல் செய்த மனுவில், தாங்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய இருப்பதால், எங்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தனர். இந்த இரு மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதிகள் பி ராமச்சந்திர மேனன், தேவன் ராமச்சந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவில், ‘
சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல. கோயிலின் பாரம்பரியங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்குமானது ஐயப்பன் கோயில். அதேசமயம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் அனைவரும் இருமுடி அணிந்து செல்ல வேண்டியது இல்லை.
ஆனால், இருமுடி கட்டி செல்பவர்கள் மட்டுமே 18 படிகளை கடக்க முடியும். இந்த விவகாரத்தில் கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இரு வாரங்களுக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
2 பெண் வழக்கறிஞர்கள் உள்பட 4 பெண்கள் தாக்கல் செய்த மனுமீது பிறப்பித்த உத்தரவில் நீதிபதிகள் கூறுகையில், பக்தர்களாக இருந்தால், அவர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.