March 27, 2023

டிராவல் ஏஜென்ஸி நடத்துவதற்காக போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து கடன் வாங்கும் இளைஞருக்கு ஆபத்துகள் அடுத்தடுத்து வந்தால் அதுவே ‘ஜருகண்டி’.

அம்மா, தங்கையுடன் வசித்து வரும் ஜெய் தவணை கட்டாதவர்களின் கார்களைப் பறிமுதல் செய்யும் வேலையைச் செய்கிறார். கவுன்சிலர் மகனின் காரைப் பறிமுதல் செய்ததால் அவரது வேலை பறிபோகிறது. இதனால் கவலையடையும் ஜெய், சொந்தமாக டிராவல் ஏஜென்ஸி நடத்த முடிவெடுக்கிறார். வங்கியில் கடன் தராமல் கைவிரிக்க, இளவரசுவின் ஆலோசனைப்படி இல்லாத சொத்தை இருப்பதாகப் போலி ஆவணம் தயார் செய்து வங்கியில் கடன் பெற்று, டிராவல் ஏஜென்ஸியைத் தொடங்குகிறார். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்க, இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட் போலி ஆவணம் குறித்து ஜெய்யிடம் விசாரிக்கிறார். அந்த வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.10 லட்சம் பணத்தை லஞ்சமாகக் கேட்கிறார். இந்நிலையில் பணத்துக்காக நண்பன் டேனியலுடன் சேர்ந்துகொண்டு ரெபா மோனிகாவைக் கடத்துகிறார் ஜெய்.

நான்கு நாட்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு இளம்பெண்ணைக் கடத்தும் டேனியல், சந்தர்ப்ப வசத்தால் தப்பானவர்களிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்க நினைக்கும் ரெபா மோனிகா, ரூ.10 லட்சம் பணத்துக்காக மனசாட்சிக்கு ஒத்துவராத வேலையைச் செய்யும் ஜெய் ஆகிய மூவரும் என்ன ஆகிறார்கள், அடுத்தடுத்து அவர்களுக்கு நேரும் சிக்கல்கள், ஆபத்துகள் என்னம் ஒவ்வொரு கேரக்டருக்கும் இருக்கும் பிரச்சினைகளை ஜெய்யால் தீர்க்க முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

மூன்று முக்கிய முடிச்சுகளை வைத்துக்கொண்டு ஒரு படம் இயக்க நினைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பிச்சுமணி. ஆனால், அது திரைக்கதையில் வலுவாகக் கட்டமைக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.

சூழ்நிலைக்கு ஏற்ப தன் கதாபாத்திரத்தின் தேவையை உணர்த்த வேண்டிய இடத்தில் ஜெய் வெறுமனே வந்து போகிறார். கதைக்குத் தேவையான நடிப்பை முழுமையாகக் கொடுக்காமல் இருந்தது பெருங்குறை. ”நமக்குத் தேவைங்கிற உடனே நம்ம தப்பை எல்லாம் நியாயப்படுத்துறோம்” என்று சொல்லும்போது மட்டும் ஜெய் கவனிக்க வைக்கிறார்.

ரெபா மோனிகா இயல்பான பெண்ணாக வந்துபோகிறார். தனக்கு நடந்த பின்னணியை முழுமையாக வெளிப்படுத்தத் தவறியிருக்கிறார். டேனியல், ரோபோ சங்கர் ஆகிய இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் பொறுமையைச் சோதிக்கிறார்கள். இளவரசு, ஜெயகுமார், அமித் திரிவேதி, ஜி.எம்.குமார் ஆகியோர் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. போபோ சஷியின் இசையில் பாடல்கள் படத்துக்கு எந்த விதத்திலும் சாதகமாக அமையவில்லை. பின்னணி இசை கதையுடன் பயணிக்கிறது. பிரவீனின் எடிட்டிங்தான் இரண்டாம் பாதியை சோர்வில்லாமல் நகர்த்துகிறது.

இயக்குநர் பிச்சுமணி திரைக்கதையை லேசுபாசாக அணுகி இருக்கிறார். கதைக்குள் பயணிக்காமல் வெறுமனே ஜெய்- டேனியல் உரையாடல்களால் நீட்டி முழக்கும்போது சோர்வே மிஞ்சுகிறது. யார் இந்த ரெபா மோனிகா என்ற பின்னணியை விவரிக்கும்போது முதல் பாதி முடிந்துவிடுகிறது. இரண்டாம் பாதியில் அதற்கான காட்சிகள் விரியும்போது ஓரளவு படத்துடன் ஒன்ற முடிகிறது.

ஜெய், டேனியலுக்கு இருக்கும் பிரச்சினையை இயக்குநர் வீரியமாக காட்சிப்படுத்தவில்லை. கடத்தல் காட்சிகள் நாடக ஒத்திகைப் பாணியிலேயே உள்ளன. ஒரு கதையாகச் சொல்லும் போது இருக்கும் சுவாரஸ்யத்தை காட்சியாகப் பதிவு செய்யத் திணறி இருக்கிறார். இதனால் திரைக்கதை சுவாரஸ்யமில்லாமல் தேக்க நிலையை அடைகிறது. ரெபா மோனிகா சென்னையில் வசிக்கும்போது அவர்களுடன் இருப்பவர்கள் யார்? 2 நாளில் பணம் தந்துவிட வேண்டும் என்று மிரட்டும் இன்ஸ்பெக்டர் அதற்குப் பிறகு கண்டுகொள்ளாதது ஏன், ரெபா மோனிகாவை போலீஸ் தேடுவதே இல்லையா போன்ற லாஜிக் கேள்விகள் இடிக்கின்றன. சாகசம் மிகுந்த நாயகன் என்று ஜெய்யைக் காட்டுவதற்காகவே வில்லன்களைப் போட்டிப் புரட்டி எடுக்கும் சண்டைக் காட்சியை வடிவமைத்திருக்கிறார்கள். இந்தக் காரணங்களால் ‘ஜருகண்டி’ நம்மை நிற்காமல் நகரச் செய்கிறது.