போலீஸ் செக்யூரிட்டி துப்பாக்கியால் சுட்டதில் ஜட்ஜ் மனைவியும் மகனும் சாவு!
ஆர்டர்லி டூட்டி பார்த்து வந்த பாதுகாப்பு அதிகாரி தாக்கியதால் பலத்த காயமடைந்த ஹரியானா நீதிபதியின் மகன், இன்று மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கான் நீதிமன்றத்தில் கூடுதல் செசன்ஸ் நீதிபதியாகப் பணியாற்றுபவர் கிருஷ்ணகாந்த். இவரது மனைவி பெயர் ரிது. நேற்று முன்தினம் (அக்டோபர் 13) மாலையில், கிருஷ்ணகாந்தின் மனைவி ரிது மற்றும் அவர்களது மகன் துருவ் ஆகியோர் குர்கானில் உள்ள ஆர்காடியா மார்க்கெட்டுக்குச் சென்றனர். அப்போது அவர்களுடன் வந்த பாதுகாப்பு அதிகாரி மகிபால் என்பவர், திடீரென்று ரிது மற்றும் துருவைத் துப்பாக்கியால் சுட்டார். மார்பில் இரண்டு குண்டுகள் பாய்ந்ததால், ரிதுவின் உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியது. இதனால், அவர் உயிருக்குப் போராடினார். துருவின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள், உடனடியாக இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, நேற்று ரிது பலியானார். ஆபத்தான நிலையில் இருந்த துருவுக்கு, தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டது. அவருக்கு உபகரணங்கள் உதவியுடன் சுவாசம் அளிக்கப் பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (அக்டோபர் 15) காலையில் துருவ் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இறுதிச்சடங்கு செய்வதற்காக ரிதுவின் உடல் ஹிசார் மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அதன் பின்னர், ரிதுவின் உடலுறுப்புகளைத் தானம் செய்யவிருப்பதாகத் தெரிவித்தனர் அவரது குடும்பத்தினர். இதையடுத்து, அவரது உடல் மீண்டும் மேதாந்தா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி மகிபாலைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஹரியானா போலீசார். தனக்கு விடுப்பு அளிக்க நீதிபதி கிருஷ்ணகாந்த் மறுத்ததாகவும், இதனால் தான் மன உளைச்சலில் இருந்ததாகவும், காரில் செல்கையில் ரிது திட்டியதால் உணர்ச்சிவசப்பட்டு துப்பாக்கியால் சுட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார் மகிபால். ஒவ்வொரு முறையும் முன்னுக்குப் பின் முரணாக அவர் பதிலளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.