October 21, 2021

முஸ்லீம் தம்பதியர்கள் எதிர் பாலினத்தவர்களோடு கைகுலுக்க மறுத்ததால் அவர்களின் குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது சுவிஸ் அரசாங்கம்.

சுவிட்சார்லாந்தில் குடியுரிமை கேட்டு முஸ்லீம் தம்பதியினர் விண்ணப்பித்திருந்தனர். அப்போது எதிர்பாலினத்தவருடன் கை குலுக்க மறுத்ததால் ’பாலின சமத்துவத்தை மதிக்கவில்லை’ எனக் கூறி அவர்களின் குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது சுவிஸ் அரசாங்கம்.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள லாசோன் நகர மேயர் கிர்கோரி ஜூனத், முஸ்லிம் தம்பதியினர் எதிர்பாலினத்தவர்களை அணுகுவது குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தயக்கம் காட்டினார்கள். மேலும், பாலின சமத்துவம் குறித்த அறியாமையுடன் அவர்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

முஸ்லீம் தம்பதியினர் நெருக்கிய உறவினர்களை தவிர பிற எதிர்பாலினத்தவர்களை தொட்டு பேச மதம் அனுமதிக்காது எனக் கூறியுள்ளனர். ”எங்கள் சட்டப்படி ஆணும் பெண்ணும் சரிசமமானவர்கள், பாலின சமத்துவத்தை விரும்பாத மத எண்ணமுடையவர்களை விட சட்டம் மேலானது” என மேயர் ஜூனத் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவினை துணை மேயர் உள்ளிட்ட 3 உறுப்பினர்களும் சரியென வரவேற்றுள்ளனர். இந்த முடிவினை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சார்லாந்தில் கைகுலுக்க மறுத்ததால் குடியுரிமை மறுக்கப்படுவது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.