October 16, 2021

விஸ்வரூபம் 2 – விமர்சனம் =நேரமிருந்தால் பார்த்து கொள்ளலாம்..!

பார்ட் ஒன் மாதிரியே அல்லது வழக்கம் போல் எதிரியைத் தேடிப் போய் மொத்தும் இந்திய உளவுத் துறை அதிகாரி கமலின் தனி ஆவர்தனம்தான் இந்த ‘விஸ்வரூபம் 2’. ஆனால்  கொஞ்சம் தீஞ்ச வாடை வந்த நேற்றைய அவியலின் சுவை என்று பக்கத்து சீட் நண்பர் சொன்னது கொஞ்சம் கூட மிகையல்ல என்பதுதான் சோகம். ஐந்தாண்டுகளுக்கு முன் எடுத்த காட்சிகளை ஒட்டி  & ஓட்டிக் காட்ட லேட்டஸ்ட் அரசியல் மற்றும் டெக்னிக்கல் போன்ற  விஷயங்களில் கவனம் செலுத்தி யிருக்கும் கமல் சொல்ல வந்த கதையை தெளிவாக , சுவையாகச்  சொல்ல தவறி விட்டார் . அது மட்டுமல்லாமல் வழக்கமான சப்பை காட்சிகளுடன். புதுசாக ஆரம்பித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலான விளம்பரங்கள்.. பேச்சுகள், பேச்சுகள் என்று எண்ட் கார்ட் போடும் போது எகிறி குதித்து வெளியேற வைத்துள்ளார் கமல்.

படத்தின் கதை என்னவென்று கேட்டால் அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் செல்லும் தீவிரவாதிகள் குழுத் தலைவன் ராகுல் போஸைத் தேடும் பயணத்தை மேற்கொள்கிறார் கமல். உடன் சேகர் கபூர், ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோர் பயணிக்கின்றனர். லண்டனில் கமல் அண்ட் கோவைப் பழி தீர்க்க ராகுல் போஸ் சதித் தீட்டம் தீட்ட, அதை வெற்றிகரமாக முறியடிக்கிறார் கமல். 1500 டன் எடை கொண்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்படுகிறது. டபுள் கேம் ஆடும் உயர் அதிகாரி ஒருவரால் தன் உயிருக்கே ஆபத்து நேர்கிறது. ராகுல் போஸாலும் பேராபத்து தொடர்கிறது. இவற்றை கமல் எப்படி சந்திக் கிறார், அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதுதான் இந்த ’விஸ்வரூபம் 2’ கதை.

இயக்குநராகவும், நடிகராகவும் கமல் தன்னை மிகச் சரியாக நிறுவியிருக்கும் படம் என்று சொல்ல லாம். நளினம் மிகுந்த கதக் நடன ஆசிரியராக இருக்கும் கமல்ஹாசனின் நடிப்பை யார் குறை சொல்ல முடியும். இப்படத்தில் கமலுடன் நடிக்கும் அத்தனை நடிக, நடிகைகளும் நிஜ கேரக்டர் களாகவே மாறி சபாஷ் சொல்ல வைத்து விடுவதெல்லாம் உண்மைதான். ஷானு வர்க்கீஸ் மற்றும் ஷாம்தாட் சைனுதீன் ஆகியோரது ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் ஒகே தான். அதேபோல், படத்தொகுப்பாளர்கள் மஹேஷ் நாராயணன், விஜய் சங்கர் ஆகியோர் முடிந்தவரை பழைய காட்சி களை கோர்த்து ஒரு படமாக கொடுக்க பெரிய அளவில் முயற்சி செய்து ஒப்பேற்றி இருக்கிறார்கள்.

மற்றபடி .. சிம்பிளாக சொல்வதானால் சின்னத்திரையில் முதன் முறையாக விரைவில் போடும் போது இந்த விஸ்வரூபம் 2 -வை நேரமிருந்தால் பார்த்து கொள்ளலாம்..!