September 20, 2021

கோலிசோடா-2 – சினிமா விமர்சனம்

படத்தில் சமுத்திரக்கனி, செம்பன் வினோத் ஜோஸ், பரத் சீனி, வினோத், இசக்கி பரத், சுபிக்ஷா, கிருஷா குருப்,கிருஷ்ணா, ரக்ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

மக்கள் தெடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, இசை – அச்சு ராஜமணி, பாடல்கள் – மதன் கார்க்கி, மணி அமுதவன், விவேகா, படத் தொகுப்பு – தீபக், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், கலை – ஜனார்த்தனன், நடனம் – ஸ்ரீதர், தயாரிப்பு – பாரத் சீனி, ஒளிப்பதிவு, இயக்கம் – எஸ்.டி.விஜய் மில்டன்.

இளைஞர் பாரத் சீனி, துறைமுகம் பகுதியில் வசிக்கும் மிகப் பெரிய ரவுடியான தில்லையிடம்(செம்பன் வினோத் ஜோஸ்) அடியாள் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் இருக்கும் சுபிக்சாவை காதலித்தும் வருகிறார். இவர்களின் காதல் விஷயம் சுபிக்சாவின் அம்மா ரோகிணிக்கு தெரிய வர, ரவுடி வேலை செய்வதை விட்டுவிட்டு வேறு நல்ல வேலைக்கு போக சொல்லி வலியுறுத்துகிறார்.

தனது காதலிக்காக இதனை ஏற்றுக் கொள்ளும் பாரத் சீனியும் தில்லையிடம் இருந்து பிரிந்து வேறு வேலைக்கு செல்ல முயல்றார். ஆனால் தில்லை மறைமுகமாக பாரத் சீனிக்கு வேலை கிடைக்காத மாதிரி பார்த்துக் கொள்கிறார்.

கடைசியாக ஒரு இடத்தில் வேலைக்காக போகும்போது அங்கே காத்திருக்கும் தில்லைக்கு உதவப் போய் ஒரு கடத்தல் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார் பாரத் சீனி. இந்தப் பிரச்சினையால் தில்லை மீது கொலை வெறியாகிறார் பாரத் சீனி.

ஓட்டலில் சப்ளையராக வேலை செய்யும் இளைஞர் இசக்கி பரத், கூடைப் பந்தாட்டத்தில் ஆர்வமாக இருந்து வருகிறார். கூடைப் பந்தாட்டத்தில் வெற்றி பெற்றால் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்பதால் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இவர் கிரிஷா குரூப்பை காதலித்து வருகிறார்.

இவர்களின் காதல் விஷயம் ஜாதி தலைவருக்கு (ஸ்டண்ட் சிவா) தெரியவர, அவர் கிரிஷா குரூப்பை அடித்து விடுகிறார். ஜாதி தலைவர் மீது புகார் கொடுக்க செல்கிறார்கள். தன் காதலனுடன் சென்ற கிரிஷா குரூப்பை போலீஸ் நிலையத்தில் திருமணம் செய்து வைக்கிறார்கள். பின்னர், இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜாதி தலைவர் இசக்கி பரத்தை அடித்துவிட்டு, கிரிஷா குரூப்பை அழைத்து சென்று தனது சங்க அலுவலகத்தில் அடைத்து வைக்கிறார்.

மற்றொரு இளைஞர் வினோத், ஆட்டோ ஓட்டும் இவர் கார் வாங்க வேண்டும் என்பது லட்சியம். தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கும் பணத்தை சமுத்திரக்கனியிடம் கொடுத்து சேமித்து வைத்திருக்கிறார். இதற்கிடையில் சமுத்திரகனியின் அறிவுரைப்படி பட்டாசு கடை நடத்தி லாபம் பார்த்து கார் வாங்கலாம் என்று யோசனை வரவே, அந்தப் பகுதி கவுன்சிலரான சரவணா சுப்பையாவிடம் கடை வைக்க ஒரு லட்சம் லஞ்சப் பணம் கொடுத்து ஏமாந்து விடுகிறார்.

ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத மூன்று இளைஞர்களுக்கும் முன்னாள் போலீஸ் ஏட்டுவான சமுத்திரக்கனி மட்டுமே நண்பராக இருக்கிறார். இவர் இந்த இளைஞர்களுக்கு அவ்வபோது அறிவுரை சொல்வதோடு, அவர்களுக்கு சிறு சிறு உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்த மூன்று இளைஞர்களுமே ஒரு வகையில் சாதி சங்கத் தலைவர், கவுன்சிலர் சரவண சுப்பையா, ரவுடி தில்லை என்று மூன்று பேரால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இப்படி தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்பிய மூன்று இளைஞர்களை இந்த சமூகம் வளர விடாமல் பிரச்சனைகளை கொடுக்கிறது. அந்தப் பிரச்சனைகளில் இருந்து இவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார் விஜய் மில்டன்.

விஜய் மில்டனின் படங்கள் எப்போதும் தொழில் நுட்பத்திலும், கதைக்களத்திலும் வலுவானதாக இருக்கும்.எந்த ஒரு எதிர்ப்பார்ப்பு இல்லாமல் எளிமையான கதையை வலிமையாக சொல்லும். இந்தப் படமும் அப்படித்தான் உருவாகியுள்ளது.

படத்தில் பரத் சீனி அடியாளாக வலம் வருகிறார். காதலியை கரம் பிடிப்பதற்காக ரவுடியை விட்டு விலக முடியாமல், காதலியுடனும் செல்ல முடியாமல் தவிக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. முந்தைய படத்தைவிட சிறப்பாகவே நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் சுபிக்‌ஷா துறுதுறு பெண்ணாக நடித்து மனதை கவர்ந்திருக்கிறார்.

இசக்கி பரத் சுறுசுறுப்பான இளைஞராக மனதில் பதிகிறார். இவருக்கு ஜோடியாக வரும் கிரிஷா குரூப்பும் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுபோல், வினோத் ஆட்டோ ஓட்டுநராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். 

இந்த படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் மேனன்தான். அதிலும் சமுத்திரக்கனியின் நடிப்பு படத்திற்கு மிகப் பெரிய பலம். கவுதம் மேனன் கம்பீரமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ரோகிணி தனது பிளாஷ்பேக்கை ஓவியங்கள் மூலம் தனது மருமகனுக்கு சொல்லும் காட்சியில்  யதார்த்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. அச்சு ராஜாமணியின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக வந்திருக்கிறது. சண்டை காட்சிகளை அமர்க்களமாகப் படம் பிடித்திருக்கிறார்கள். அதேபோல் படத் தொகுப்பாளரும் தனது பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார் என்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது.

படம் துவக்கத்தில் மெதுவாகத்தான் செல்கிறது. ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சிகளே திரையில் ஓடுவதால் ஒரு சலிப்புணர்வு ஏற்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் பிற்பாதியில் படம் சூடு வைத்த என்ஜீனாக பறக்கிறது. முதல் பாதியிலும் இதேபோல் சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.