September 18, 2021

பத்தில் எட்டு பேர் தங்களுடைய வேலையில் திருப்தியற்றவர்களாக உள்ளனர் என்று புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

இதுகுறித்து டைம்ஸ்ஜாப்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’80 விழுக்காட்டினர் தங்களுடைய தற்போதைய வேலையில் திருப்தியற்றவர்களாகத்தான் உள்ளனர். 20 விழுக்காட்டினர் மட்டுமே தங்களுடைய பணியில் மகிழ்வோடு உள்ளனர். புதிய தொழில்நுட்பங்கள் 75 விழுக்காட்டினருக்கு திருப்தியளிப்பதாக இல்லை. 20 விழுக்காட்டினர் மட்டுமே தங்களுடைய வேலையில் பயன்படுத்துகிற புதிய தொழில்நுட்பங்களை வரவேற்கின்றனர். 5 விழுக்காட்டினர் புதிய தொழில்நுட்பங்களால் எந்தத் தாக்கத்தையும் உணரவில்லை என்று கூறுகின்றனர்.

அதேபோல 50 விழுக்காட்டினருக்கு தங்களுடைய வேலை பறிபோகும் என்ற அச்சம் உள்ளது. வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்துவதற்கான போதிய வேலை இல்லை என்று 10 விழுக்காட்டினரும், பணிமனையின் நெறிமுறைகள் போதுமானதாக இல்லை என்று 15 விழுக்காட்டினரும், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் குறையலாம் என்று 25 விழுக்காட்டினரும் கருதுகின்றனர். உடன் பணிபுரிபவர்களுடன் சிறந்த நட்புறவு உள்ளது என்று 40 விழுக்காட்டினரும், அனைத்துத் தொகுப்புகளின் பயன்களும் முழுவதுமாக கிடைப்பதாக 25 விழுக்காட்டினரும், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் முழுவதுமாக கிடைப்பதாக 15 விழுக்காட்டினரும், ஓய்வூதியத் திட்டத்தின் பயன்கள் கிடைப்பதாக 5 விழுக்காட்டினரும் கூறுகின்றனர்.

20 விழுக்காட்டினர் தங்களுடைய பணியில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியுள்ளதற்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிறது என்று 40 விழுக்காட்டினரும், வேலை எளிதாக இருப்பதாக 15 விழுக்காட்டினரும், 25 விழுக்காட்டினர் பணிபுரியும் இடம் உற்சாகமானதாக உள்ளதென்றும் கூறுகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பணிபுரிந்து கொண்டிருக்கும் 1,100 பேரிடம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.