September 18, 2021

நடிகர்கள் – டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகினி, மனோபாலா, கலைராணி, உதயபானு மகேஷ்வரன், தீபா ராமானுஜம் மற்றும் பலர். தயாரிப்பு – யூட்லி ஃபிலிம்ஸ் விக்ரம் மெஹ்ரா, பி.ஆர்.விஜயலட்சுமி, இயக்கம் – பி.ஆர்.விஜயலட்சுமி, இசை – தரன், ஒளிப்பதிவு – அகிலன், படத்தொகுப்பு – சுனில் ஸ்ரீநாயர்

படத்தின் தலைப்பிலேயே இது உண்மை சம்பவத்தில் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என சொல்லிவிடுகிறார்கள். ரிமோட்டில் இருப்பது போல் வாழ்விலும் ஒரு ரீவைன்ட் பட்டன் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஹீரோ அபி என்கிற அபிமன்யுவின் (டோவினோ தாமஸ்) வசனத்துடன் தொடங்குகிறது படம். பின் நம்மை பிளாஷ் பேக்குக்கு அழைத்து செல்கிறார்கள். ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில், பொறியாளராக வேலை பார்க்கும் இளைஞன் அபி. அம்மா, அப்பா வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கும் சுற்றித் திரிவதால், சிறு வயதில் இருந்தே ஹாஸ்டல் வாழ்க்கை வாழ்பவன்.

மேட்டுப்பாளையத்தில் சுதந்திர பறவையாக வாழும் இளம்பெண் அனு(பியா பாஜ்பாய்). சமூக அக்கறையுடன் ஃபேஸ்புக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். புற்றுநோயாளிக்களுக்காக மொட்டை அடித்து, அந்த வீடியோவையும் ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்ய, அனுவின் மீது அபிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், வீடியோ காலிங் என இருவரும் நெருக்கமாகிறார்கள். முதல் சந்திப்பிலேயே திருமணமும் செய்து கொள்கிறார்கள். இதனை அபியின் பெற்றோர், வீடியோ காலிங் வழியே பார்த்து வாழ்த்தவும் செய்கிறார்கள். அந்த கொடுப்பனையும் அனுவின் தாய்க்கு (ரோகினி) கிடைக்கவில்லை.

காதலர்கள் இருவரும் கணவன் – மனைவியாகி, சென்னையில் சந்தோஷமாக வாழ்வை தொடர்கிறார்கள். அனுவும் கற்பமானதும் தலைக்கால் புரியாமல் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதக்கிறார்கள் கணவனும், மனைவியும். வாழ்வைப் பற்றி பல்வேறு திட்டங்களை இருவரும் வகுத்து வரும் சூழலில் அந்த உண்மை தெரியவருகிறது. இருவரின் வாழ்வும் சூன்யமாகிறது. அந்த உண்மை தெரிந்த பிறகு அவர்களுடைய வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பது தான் மீதிக்கதை.

இளம் காதல் ஜோடியாக டோவினோவும், பியாவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அதிலும் பியாவின் நடிப்பு பல கைத்தட்டல்களை வாங்குகிறது. புற்றுநோயாளிக்களுக்காக முடியை தானம் செய்து மொட்டை தலையுடன் சுற்றுகிறார். பியாவுக்கு தைரியம் அதிகம். தாய்மையை வெளிப்படுத்தும் தருணங்களிலும், காதலை இழந்துவாடும் நிலையிலும் அபாரமாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள் பியா.

டோவினோ தாமஸ் கூடிய விரைவில் மாதவனின் சாக்லெட் பாய் இடத்தை பிடித்துவிடுவார் போல. ரொமான்ஸ் மட்டுமின்றி, பின்பாதியில் வரும் உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் நிறைவாகவே செய்திருக்கிறார்.

இன்றைய இளைஞர்கள் எப்படி காதலிக்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி. இது போன்ற சப்ஜெக்ட்டை எடுக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும். அதற்காகவே பாராட்டலாம். இன்றைய காலகட்டத்தில் ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள, இணையமே போதுமானதாக இருக்கிறது என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.

ஆனால் கதையாசியிரியர் உதயபானு மகேஷ்வரன் கதையில் கவனம் செலுத்தி அளவுக்கு திரைக்கதையில் கவனம் செலுத்தவில்லை. முதல் பாதியில் காதல், மயக்கம், ரோமான்ஸ் என காட்சிகள் விறுவிறுவென நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில், ஒரு பிரச்சினையை மையப்படுத்தி கதை நகராமல் அப்படியே நிற்கிறது.

கதாநாயகனுக்கும், நாயகிக்கும் தங்கள் உறவு குறித்து தெரிந்ததும் முதலில் அதிர்ச்சி அடைகிறார்கள். அது இயல்பு தான். ஆனால் க்ளைமாக்ஸ் வரை அப்படியே இருபார்களா என்ன? என யோசிக்க வைக்கிறது. இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை எளிதாக யூகிக்க முடிவதால், திரைக்கதையில் பெரிய சுவாரஸ்யம் இல்லை.

எதிர்த்த வீட்டு ஆண்டி, அங்கிளாக வரும் சுஹாசினியும் பிரபுவும் படத்தின் மிகப்பெரிய ஆறுதல். அபிக்கும் அனுவுக்கும் இடையே என்ன பிரச்சினை என்பது தெரிந்திருந்தும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இளம் தம்பதிக்கு அட்வைஸ் செய்யும் அந்த காட்சி சூப்பர். அனுவின் தாயாக வரும் ரோகினி, இரண்டாம் பாதியில் தன் தவறை உணர்ந்து தவிக்கும் அந்த காட்சி ஆசம்.

தரன் இசையில் ‘எங்கடா போன’ பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. சரிகமபதநிச பாடலும் முனுமுனுக்க வைக்கிறது. அகிலனின் ஒளிப்பதிவு, முன்பாதி வெளிச்சத்தையும், பின்பாதி இருளையும் சரியாக படம் பிடித்திருக்கிறது. சுனில் ஸ்ரீநாயரின் படத்தொகுப்பில், பின் பாதி கொஞ்சம் இழுவை.

எல்லாவற்றுக்கும் அவரசப்பட்டு முடிவெடுக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள், பிரச்சினை என்று வரும் போது, அதை எப்படி கையாள வேண்டும் என தெரியாமல் தடுமாறுகிறார்கள். உறவுச்சிக்கல்களை எப்படி கையாள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அதை யதார்த்தமாக வெளிப்படுத்திய விதத்தில் ‘அபியும் அனுவும்’ அவசியான படம் தான்.