September 17, 2021

கர்நாடகா தேர்தல் ; வாக்குப்பதிவு-க்கு ஆயத்தம்!

இன்னும் ஓராண்டுக்குள் நாடெங்கும் வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று கருதப்படும் கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜகவும் போராடி வருகின்றன. இந்தநிலையில் நேற்று மாலையில் ஆர்.ஆர்.நகர் தேர்தலை தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனவே இன்று ஓட்டுப்பதிவு நடக்காது. அதற்கு பதிலாக மே 28ம் தேதி அங்கு ஓட்டுப்பதிவு நடக்கும். மே 31ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே சமயம் கர்நாடக மாநிலத்தில் இதர தொகுதிகளில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த கர்நாடக சட்டமன்ற பதவிக்காலம் வரும் 28ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை – 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 223 தொகுதிகளுக்கும் தேர்தல் நாளை நடைபெற இருந்தது.

கர்நாடக மாநிலம் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மே 31ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ஆகையால் அங்கு 222 தொகுதிகளில் மட்டுமே நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இதன்படி கர்நாடகாவில் நாளை காலை 7 மணி முதல் தொடங்கவிருக்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 55,600 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சுமார் 3.5 லட்சம்அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த தேர்தலில் 2.52 கோடி ஆண் வாக்காளர்கள், 2.44 கோடி பெண் வாக்காளர்கள், 4,552 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4.98 கோடி பேர் வாக்களிக்க தகுதியடையவர்களாக உள்ளனர்.

இந்த தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் மாநில காவல்துறையினர் என மொத்தம் 1,50,000க்கும் அதிமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் அந்தந்த வாக்குசாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.

வாக்குசாவடிகள் அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்கவும், பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 222 தொகுதிகளில் நடத்தப்படும் இந்த தேர்தலில் மொத்தம் 2,636 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து 21 இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்டங்களாக கர்நாடக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

இவர்களைத் தவிர முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வீரப்பமொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா சாமூண்டீஸ்வரி மற்றும் பதாமி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மதசார்பற்ற ஜனதா தளத்தின் முதல்வர் வேட்பாளர் குமாரசாமி ராமநகரா மற்றும் சென்னாபட்டினம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் எதியூரப்பா ஷிகரிபூரா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் கர்நாடக முதல்வரான பாஜக வேட்பாளர் ஜகதீஷ் ஷெட்டரும் ஹப்பலி மற்றும் தார்வாத் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.

தற்போதைய சூழ்நிலையில் பாஜக 22 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. கர்நாடகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இது தென்மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க முதற்படியாக அமையும் என பாஜக எண்ணுகிறது.

காங்கிரஸ் கட்சியோ எப்படியாவது மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது. கர்நாடகத்தில் கடந்த 1985 ஆம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக யாராலும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இயலாமல் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை பதிவாகும் வாக்குகள் வரும் மே 15ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

25 பெண் வேட்பாளர்கள்

கர்நாடக தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கும்போது, ஆண்கள், பெண்கள் இடையே சமத்துவம் அளிக்கப்படும் என்றார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ. சார்பில் 224 வேட்பாளர்கள் அறிக்கப்பட்டபோதும் இவர்களில் 6 பெண் வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர். அதே சமயம் காங். சார்பில் 15 பெண்வேட்பாளர்களும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் 4பெண் வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
கர்நாடகாவில் 49 சதவீத பெண் வாக்காளர்கள் இருந்தபோதிலும் இந்த பிரதான 3 கட்சிகள் சார்பில் 25 பெண்வேட்பாளர்களே களத்தில் இருக்கிறார்கள்.