தமிழகத்தில் ஐந்தில் ஒன்று – குழந்தை திருமணம் – யூனிசெஃப் தகவல்

தமிழகத்தில் ஐந்தில் ஒன்று – குழந்தை திருமணம் – யூனிசெஃப் தகவல்

நம் ஒட்டு மொத்த இந்தியாவில் நிலவும் சமுதாயப் பிரச்னைகளில் ஒன்று குழந்தை திருமணம். வளர்ச்சி அடைந்து விட்டதாக சுட்டிக் காட்டப்படும் குஜராத் தொடங்கி ஜார்க்கண்ட், சண்டிகார், பீகார், உ.பி. உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் தங்கள் வீட்டு பெண் குழந்தைகள் பருவம் வந்த உடனேயே திருமணத்தை நடத்தி வைக்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. தாய்மையை ஏற்கும் பக்குவமோ, உடல் வலிவோ வயதோ இல்லாத நிலையில் அதிகப்படியான வயதுடையவரை தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கொடுமை வடமாநிலம் மட்டுமின்றி தென் மாநிலங்களிலும் அதிகம் நடைமுறையில் உள்ளது.

child mar mar 1

குறிப்பாக 2014-இல் அளிக்கப்பட்ட மத்திய குற்றவியல் ஆவண காப்பகத்தின் தகவல்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன என்பது தெரியவந்திருந்தது. இன்றளவும் தொடரும் இந்த குழந்தைத் திருமணத்துக்கு முக்கிய காரணம் வறுமை, ஆணாதிக்கம், கல்லாமை, பெண் குழந்தைகளை குடும்ப சுமையாக கருதுவது, சமூகத்தில் பெண்ணை அடிமைப்படுத்துவது, வரதட்சனை கொடுமை, குறைந்துவரும் பாலின சதவீதம் போன்றவைதான்.மேலும் இப்போது அதிகரித்துவரும் பாலியல் கொடூரங்களை கண்டு பயந்துபோகும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்துவைக்கும் முடிவில் இறங்குகின்றனர் என்பதும் அதிர்ச்சியான விஷயம்.

மேலும் போதுமான உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இல்லாமல் இருப்பது. வீட்டின் அருகில் பள்ளி இல்லாமல் இருப்பது. பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதியின்மை ஆகிய காரணங்களாலும் சிறுமிகள் படிப்பு நிறுத்தப்பட்டு திருமணத்திற்கு தள்ளப்படுகின்றனர். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடம் பெயரும் அன்றாட கூலிகளுக்கு பருவமடைந்த பெண்களை பாதுகாப்பது பெரும் சவாலாக உள்ளது. எனவே பிழைப்புக்காக இடம் பெயர்வதற்கு முன்பு பெண்ணை யாரிடமாவது ஒப்படைப்பது என்ற முடிவுக்கு வந்து திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். குழந்தைத் திருமணத்தை தடுப்பது தொடர்பாக பல சட்டங்கள் உள்ளன. இருந்தும் இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால்தான் தடுக்க முடியவில்லை.

இந்நிலையில்தான் தமிழகத்தில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக யூனிசெஃப் (UNICEF) அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூரில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் நிறுவனம் சார்பில், வளர் இளம் பருவத்தினருக்கான மேம்பாட்டு மையம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி மற்றும் யூனிசெஃப் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஜாப் ஜேகரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய ஜாப் ஜேகரியா தமிழகத்தில் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்ட பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவளர் இளம் பருவத்தினர் வேலைகளுக்குச் செல்வதாகக் தெரிவித்தார். மேலும் 10 முதல் 19 வயதுடைய பெண்களில் 45 சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்

Related Posts

error: Content is protected !!