September 18, 2021

இயேசு கிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்தது குறித்து மகாத்மா காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவில் ரூ.33 லட்சத்துக்கு(50 ஆயிரம் டாலர்) ஏலத்தில்விற்பனையானது.

இந்த கடித்ததை கடந்த 1926ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி இந்தியாவில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மகாத்மா காந்தி அமெரிக்காவில் உள்ள கிறிஸ்துவ மதகுரு மில்டன் நியூபெரி பிரான்ட்ஸ் என்பவருக்கு எழுதியுள்ளார்.

மிகவும் தடினமான எழுத்தில் தட்டச்சு செய்யப்பட்ட அந்த கடிதத்தில், மகாத்மா காந்தியின் கையொப்பம் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது. இந்த கடிதத்தை தனிமனிதர் ஒருவர் பல ஆண்டுகளாக பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார். அதன்பின் அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் உள்ள ராப் கலெக்ஸனில் கொடுத்து விற்பனை செய்துள்ளார்.

மகாத்மா காந்தி எழுதிய கடிதம்   –  படம் உதவி: கெட்டி இமேஜஸ்

இந்த கடிதம் குறித்து ராப் கலெக்ஸன் ஏல நிறுவனத்தின் தலைவர் நாதன் ராப் கூறியதாவது:

இந்த கடிதத்தில் மகாத்மா காந்தி இயேசு கிறிஸ்து குறித்து மிகுந்த பெருமையுடன் எழுதியுள்ளார். உலகிற்கு மனிதநேயத்தை கற்பித்த மிகப்பெரிய ஆசிரியர்களில் இயேசு கிறிஸ்துவும் ஒருவர் என்று தெரிவித்துள்ளார். உலகில் அமைதியை உருவாக்கவே மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இயேசு கிறிஸ்து இந்த உலகில் அவதரித்து மனிதநேயத்தை போதித்து, சகமனிதரிடமும் சமத்துவத்தை காண முயற்சித்துள்ளார்.

மதத்தைப் பற்றி மகாத்மா காந்தி எழுதிய கடிதங்களில் இது மிகச்சிறப்பானது. நாங்கள் நடத்திய ஆய்வில் காந்தி எழுதிய பல கடிதங்களில் ஒரு இடத்தில் கூட இயேசு குறித்து குறிப்பிட்டதில்லை. இந்த கடிதத்தில் மட்டுமே இயேசு குறித்து காந்தி புகழந்து எழுதியுள்ளார்.

காந்தி இந்த கடிதத்தில் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும், மத ஒன்றுமை என்பதை நாம் ஏற்படுத்த முடியாது, பிற மதத்தை அனைவரும் மதித்து நடப்பதன் மூலமே மத ஒற்றுமையை கொண்டுவர முடியும். அதன் மூலமே சகிப்புதன்மையும் ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார். காந்தி எழுதி எங்களுக்கு கிடைத்த கடிதங்களில் இது மிகவும் வலிமையான வார்த்தைகளைக் கொண்டது. மிகவும் உணர்வுப்பூர்வமானது.

இந்த கடித்தில் கையொப்பம் இடுவதற்கு காந்தி பிரத்யேக மை பயன்படுத்தியுள்ளார். மேலும், கடிதம் எழுத பயன்படுத்தப்பட்ட காகிதத்தின் ஆயுள்காலம், டைப்பிங், மை ஆகியவை குறித்து வல்லுநர்கள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுவிட்டது. இந்த கடிதம் எழுதும் போது, மகாத்மா காந்தி, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார்.

இந்த கடிதமே 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விலைபோனது