பச்சை என்கிற காத்து படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கீரா. அந்த படம் வியாபார ரீதியாக தோல்வி அடைந்தாலும் விமர்சன ரீதியில் பெயர் பெற்றது. அவரது அடுத்த படைப்பு மெர்லின் எப்படி இருக்கிறாள்? சினிமாவில் வாய்ப்பு தேடும் ஒருவனுக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அவன் உடன் இருக்கும் நண்பர்கள் அவனை கதை எழுத விடாமல் தொந்தரவு செய்கிறார்கள். பொறுத்துப் பொறுத்து பார்த்த அவன் நண்பர்களிடம் ஒரு பேய் கதை சொல்கிறான். அவன் சொன்னதை நண்பர்களும் நம்பி விடுகின்றனர். ஆனால் அடுத்த நாளே அவன் சொன்ன அமானுஷ்ய விஷயங்கள் அப்படியே நடக்கின்றன. அதற்கான காரணம் என்ன? ஹீரோ சொன்ன கதை உண்மையில் நடந்ததா? என்று பல கேள்விகளுக்கு விடை தருகிறது மெர்லின்.

தமிழ் சினிமாவின் 1945 வது பேய் படமா என்று உள்ளே நுழைபவர்களுக்கு முதல் காட்சியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார் கீரா. காலம்காலமாக கிராமங்களில் கேட்ட முனி கதையை மோகினி கதையாக்கி பிரம்மாண்ட விஷுவலாக்கியதில் கீராவின் க்ரியேட்டிவிட்டி தெரிகிறது. அதன் பின் சமகாலத்துக்கு படம் நகர்ந்த உடன் லொள்ளுசபா ஜீவா, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரின் கலகல காமெடியால் வேகமாகவே நகர்கிறது. அந்த காமெடிக்களத்தை இரண்டாம் பாதியிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். முதல் பாதியில் பல இடங்களில் கண்ணிகளை புதைத்த இயக்குநர் அவற்றை இரண்டாம் பாதியில் வெடிக்க வைப்பதில் கோட்டை விட்டுள்ளார். ஆங்காங்கே இருக்கும் லாஜிக் தவறுகளும் இடிக்கின்றன. கணேஷ் ரகாவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசையும் அலற விடுகிறது.

முத்துக்குமரனின் ஒளிப்பதிவும், சாமுவேலின் படத்தொகுப்பும் த்ரில் கூட்டுகின்றன. ஃப்ளாஷ்பேக்குக்குள் கனவு, கனவுக்குள் ஃப்ளாஷ்பேக் என்று படம் முடியப் போகும் வரை புது கேரக்டர்கள் வருவது சற்று அயர்ச்சியை தருகிறது.ஹீரோ விஷ்ணுப்ரியனும் ஹீரோயின் அஸ்வினியும் தங்களது பங்களிப்பை சரியாக தந்திருக்கிறார்கள். இன்னொரு பேய் படம் என்றில்லாமல் சைக்கோ த்ரில்லராக படத்தை கொண்டு சென்றது சிறப்பு. மெர்லின் – ஹாரர், கிளாமர், காமெடி கலந்த ஒரு த்ரில்லர்.

error: Content is protected !!