March 31, 2023

கொலை, கொள்ளை என குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலிடமிருந்து சகோதரியையும், நண்பனையும் காப்பாற்றும் நண்பனின் கதையே ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தெய்வத்துக்குப் பதிலாக நண்பர்கள் என்று மாற்றி வைத்துப் பழகும் நண்பர் சந்தீப் கிஷன். தன்னுடன் கேட்ரிங் வேலை செய்யும் விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி என நண்பர்களுடன் இயல்பான வாழ்வின் சுக துக்கங்களை எதிர்கொள்கிறார். தன் தங்கையை மருத்துவமனையில் இருந்து அழைத்து வரும்போது ஒரு கும்பல் திடீரென கொலை முயற்சியில் இறங்கி தாக்கத் தொடங்குகிறது. இதனால் நிலைகுலைந்துபோகும் சந்தீப் தன்னைக் கொல்ல வரவில்லை என்பதையும், நண்பனைக் கொல்ல வந்தார்கள் தெரிந்து கொள்கிறார். அந்தக் கும்பல் யார்? அவர்கள் நோக்கம் நிறைவேறியதா? சந்தீப் என்ன செய்தார்? கொலை முயற்சிக்கான பின்னணி என்ன? என்பதே திரைக்கதையாக விரிகிறது.

சுசீந்திரனுக்கு இது 10-வது படம். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அவரின் படங்களில் நடித்த கதாபாத்திரங்களே மீண்டும் மீண்டும் அதே கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். துளசி, சூரி, அப்புக்குட்டி, அருள்தாஸ், வினோத், திலீபன், டி.சிவா ஆகியோருக்கு கிளிஷே கேரக்டர்கள்தான்.

பாசமும், அன்பும் கொண்ட இளைஞனாகவும், அடிதடி, வம்புக்குப் போகாத அம்மா சொல்படி கேட்கும் சமத்துப் பிள்ளையாக சந்தீப் இருக்கிறார். பொறுப்பாக நடந்துகொள்வது, வலியை அனுபவித்த பிறகும் அறிவுரை சொல்வது என நடிப்பில் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அத்தனை தகுதியும், உடல் மொழியும் இருந்தும் அதை சரியாக இயக்குநர் வெளிக்கொணரவில்லை.

தப்பென்றால் தட்டிக்கேட்பதும், ஆவேசப்படுவதுமாக நண்பன் விக்ராந்த் இருக்கிறார். தோற்றத்தில் ஸ்டைலிஷாக இருந்தாலும் அவர் கதாபாத்திரம் ‘பாண்டியநாடு’ படத்தின் சாயலை ஒத்திருக்கிறது.

நாயகி மெஹ்ரின் கவுரவத் தோற்றம் அளவுக்கே வந்து போகிறார். அனுராதாவாக வரும் சாதிகா பாத்திரம் உணர்ந்து பொருத்தமாக நடித்திருக்கிறார்.

ஹரீஷ் உத்தமன் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்படவில்லை. ‘வத்திக்குச்சி’ திலீபன், ‘நான் மகான் அல்ல’ வினோத் உட்பட பலருக்கு படத்தில் பெரிதாக எந்த முக்கியத்துவமும் இல்லை.

லட்சுமண் குமாரின் ஒளிப்பதிவு சென்னை மாநகரின் வன்முறையை அப்படியே அம்பலப்படுத்துகிறது. இமான் எப்போதும் தரும் இசையை திரும்பத் திரும்ப இரைச்சலாகத் தந்திருக்கிறார். காசி விஸ்வநாதன் பாடல்களுக்கு கத்தரி போட்டிருக்கலாம். பொருத்தமில்லாத இடங்களில் பாடல்கள் துருத்தி நிற்கின்றன.

கொலை முயற்சிக்கான காரணம் இதுவல்ல அது என்று புதிதாய் கூறுவது நம்பும்படியாக இருந்தாலும் அழுத்தமாக சொல்லப்படவில்லை.பல இடங்களில் லாஜிக் தவறுகிறது. நகைச்சுவை என்கிற பெயரில் பழைய சங்கதிகளையே இட்டு நிரப்பி இருக்கிறார்கள். கிளிஷே காட்சிகள், டெம்ப்ளேட் கதாபாத்திரங்கள் என்று வழக்கமும், பழக்கமும் மிகுந்த படமாகவே இருப்பதுதான் பலவீனம்.

இவற்றை தவிர்த்துப் பார்த்தால் சமூகத்தில் நிலவும் சீர்கேடுகள் குறித்த பதிவை அக்கறையுடன் பதிவு செய்த விதத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ கவனத்துக்குரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.