March 27, 2023

இன்னிய கூகிள் டூடுல் தகவல்

இந்தியாவின் தலைசிறந்த ‘கதக்’ நடனக் கலைஞர்களில் ஒருவர்தான் சித்தாரா தேவி.

கல்கத்தாவில் பிறந்த இந்தம்மாவோட பெற்றோர்கள் அவருக்கு தனலட்சுமி என்று பேர் வச்சாங்க. இவரோட அப்பா சுகதேவ் மஹாராஜ் ‘கதக்’ நடன ஆசிரியர். அதனால் தக்கனுண்டு வயசிலேயே நடன நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார்.

16 வயதில் இவர் ஆடிய நடனத்தை கண்ட ரவீந்திரநாத் தாகூர், “Nritya Samragini” என்று குறிப்பிட்டார். அதாவது ‘நாட்டிய அரசி’ என்று பொருள். அப்பாலே 12ஆவது வயசிலே திரைத்துறையிலும் பாதம் பதித்துவிட்டார். இவரது நடனத்தை கண்டு வியந்த நடன இயக்குநர் நிரஞ்சன் ஷர்மா, 1940ஆம் ஆண்டு வெளியான ‘உஷா ஹரன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் செஞ்சார். அதன் பிறகு நாகினா, அஞ்சலி, மதர் இந்தியா என சில படங்களில் நடனம் ஆடியிருக்கிறார்.

பின்னர் திரையுலகை விட்டு விலகி முழுவதுமாக நடனத்துறையில் பணிபுரிய தொடங்கிவிட்டார். கவிதைகள் மற்றும் இயற்கை சூழ்நிலையை கருவாகக் கொண்டு நடனமாவது இவரின் சிறப்பம்சம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். அதோடு நில்லாமல் வெளிநாடுகளிலும் தன் நாட்டிய திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். லண்டனில் உள்ள ‘ராயல் ஆல்பர்ட் ஹால்’ மற்றும் நியூயார்க்கில் உள்ள ‘கார்னெகி ஹால்’ என வெளிநாட்டு அரங்குகளில் தன் பாதங்களை பதித்த பெருமைக்குச் சொந்தக்காரர். இவரது கலை சேவையை பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சங்கீத் நாதக் அகாடமி அவார்டு (1969), பத்மஸ்ரீ (1973), காளிதாஸ் சம்மன் (1995) என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதே சமயம் இவருக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட ‘பத்ம பூஷண்’ விருதினை ஏற்க மறுத்துவிட்டார். அதனை மறுத்ததற்கான காரணமாக அவர், “இது எனக்கு மதிப்பை அல்ல அவமதிப்பையே ஏற்படுத்துகிறது. நடனத்துறைக்கு நான் ஆற்றிய பங்களிப்பை அரசாங்கம் உணரவில்லை. பாரத ரத்னா விருதுக்கு குறைவான வேறெந்த ஒரு விருதையும் நான் பெறத் தயாராக இல்லை” என்று தெரிவித்தார். அவர் விருதுகளுக்கு ஆசைப்படும் பெண்மணி கிடையாது, தனக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நினைத்தார். ரவீந்திரநாத் தாகூரின் பாராட்டையே தன் வாழ்நாளின் மாபெரும் விருதாக கருதிய, சித்தாரா தேவி இதே நவம்பர் 8ல் பிறந்த தினம் என்பதால் கூகுள் தனி மரியாதை செஞ்சிருக்குது.