March 26, 2023

பணி புரியும் இடத்தில் பாலியல் தொல்லையா? ஷி. பாக்ஸ் இணையத்தில் புகார் கொடுக்கலாம்!

நம் நாட்டில் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துவருவதாக பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்து கொண்டேதான் இருக்கின்றன. அதே சமயம் இந்தியவில் பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டம் 2013-ம் ஆண்டே இயற்றப்பட்டுவிட்டது. சட்டப்படி அனைத்து நிறுவனங்களிலும் பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ”ஆனால், அது முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. இந்தச் சட்டத்தின்படி புகார் அளிக்கும் பெண், வேறு இடத்துக்குப் பணிமாறுதல் பெறலாம். அல்லது பிரச்னைக்குரிய நபரை வேறு இடத்துக்குப் பணிமாற்றம் செய்யலாம். புகார் அளிக்கும் பெண்ணுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்தச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணிபுரியும் பெண்கள் மத்தியில் விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்ணைப் பாலியல் தொந்தரவு செய்வது தவறு, அப்படிச் செய்தால் சட்டப்படி என்னென்ன தண்டனைகள் உள்ளன என்பது குறித்த விழிப்புஉணர்வையும் பணியிடங்களில் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றெல்லாம் பலர் குரல் கொடுத்து வந்த நிலையில் வேலை செய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் புகார் தெரிவிக்கும்வகையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) ஒரு புதிய இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.

அதாவது பெரும்பாலான பாலியல் வன்முறைகள் வேலை செய்யும் இடங்களில்தான் நடைபெறுகின்றன. பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களை இணையம் மூலமாகவே உடனடியாக பதிவு செய்யும் வகையில் SheBox.nic.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று அமைச்சர் மேனகா தொடங்கி வைத்த இந்த இணையதளம் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள், மகளிர் மேம்பாட்டு அமைச்சகத்தோடு தொடர்புகொண்டு பேசலாம். அளிக்கப்பட்ட புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் தெரிந்துகொள்ள முடியும். அரசு ஊழியர்களுக்கும் மட்டும் அளிக்கப்பட்டு வந்த வசதி, தற்போது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் ‘பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நடக்காமல் தடுப்பதற்கான எந்த வேலையையும் மத்திய அரசு செய்யவில்லை. 2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் ஒரு பகுதியாக, அமைக்கப்பட்டிருக்கும் விசாகா குழு சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. நிர்பயாவின் வழக்குக்குப் பின்பு இந்தச் சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டாலும், பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிக்கப் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முறைப்படுத்தப்படாத நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கே இதுபோன்ற தொல்லைகள் அதிகம் ஏற்படுகிறது. இது குறித்தெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசு, ‘ஷி பாக்ஸ்’ அமைத்திருப்பது கண்துடைப்பு நாடகம் என்று பெண்கள் அமைப்பு அப்செட் ஆவது தனி ரிப்போர்ட்.