திட்டி வாசல் – திரை விமர்சனம்
நம் நாட்டில் மனிதர்கள் தவறு செய்து விட்டு இயற்கை மீது பழி போடுவது அதிகரித்து கொண்டே போகிறது. அதாவது காடிலிருந்த யானை ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் என்றும் நகருக்குள் வெள்ளம் புகுந்தது என்றும் மக்கள் வாய் கூசாமல் பேசுவது சகஜமாகி விட்டது. உண்மையில் காட்டு பகுதிகளில் குடியேறி ஊர் ஒன்றை உருவாக்கியது நாம்தான் என்பதையும், தண்ணீர் ஓடும் பாதையில் நகரை நிர்மாணித்தது நாமேதான் என்பதையும் மறந்து விட்டு கூச்சலிடுவது பேஷனாகி விட்டது. இத்தனைக்கும் நம் இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப நாட்டின் காடு வளம் இல்லாமல் போவதை கண்டறிந்து அவற்றை மேம்படுத்த பல்வேறு வகையான சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. யானைகள் பாதுகாப்பு சட்டம் (1873), இந்திய காடுகள் பாதுகாப்பு சட்டம் (1927), வங்காள காண்டாமிருக பாதுகாப்பு சட்டம் (1932), பம்பாய் வன விலங்குகள் மற்றும் வன பறவைகள் பாதுகாப்பு சட்டம் (1951), பிராணிகள் வதை தடுப்பு சட்டம் (1960), வன விலங்கு பாதுகாப்பு சட்டம் (1972), காடுகள் பாதுகாப்பு சட்டம் (1980), காடுகள் மற்றும் இயற்கை சூழல்கல் பாதுகாப்பு சட்டம் (1994), பல்லுயிர் பெருக்க சட்டம் (2002) என பலவகையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன. மேலும் இது போன்ற சட்டங்களை மையப்படுத்தி, அவற்றை ஒவ்வொரு ஜனமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் எத்தனையோ தமிழ் உள்பட திரைப்படங்கள் வந்து போய் கொண்டுதான் இருக்கின்றன. அதே கருத்தை அழுத்தமாக சொல்ல விரும்பி அதற்க்காக கம்யூனிஸ்ட், புரட்சி, வர்க்கப் போராட்டம், அது, இது என்று அனல் பறப்பதாக நினைத்து கொண்டு வந்திருப்பதுதான் திட்டி வாசல்.
அதிலும் படத்தின் தொடக்கத்திலேயே சமீபத்தில் நெல்லையில் நடந்த கலெக்டர் ஆபீசில் தீக்குளித்த சம்பவத்தை நினைவூட்டுவதால் கதைக்குள் ஒன்றி விட முடிகிறது என்பது பாசிட்டிவ். கதை என்னவென்று கேட்டால் ஒரு மலை கிராம மக்கள். அந்த மலை கிராமத்திற்கு அரசாங்கம் பட்டா போட்டுத் தந்த இடத்தை வனத்துறை அமைச்சர் (வழக்கம் போல்) கார்ப்பரேட் குரூபிற்கு கை மாற்ற திட்டம் போடுகிறார். அதுக்கேற்றாற் போல் அவருக்கு ரேஞ்சர், காவல்துறை அதிகாரி, கலெக்டர் எல்லோரும் கூட்டாளிகளாகி அந்த மலை கிராம மக்களை அங்கிருந்த காலி செய்ய முயலும் போது அக்கிராம இளைஞர்களுக்கு கோபம் வருவதும் அவர்களை தீவிரவாதிகள் முத்திரைக் குத்தி ஜெயிலுக்குள் தள்ளிய நிலையில்
அதே ஜெயிலில் இருக்கும் அஜய் ரத்தினம் பேசி, பாடி நடித்துக் காட்டும் “புரட்சி” யில் மயங்கி உடனடியாக நம்ம கிராம இளைஞர்களும் புரட்சி போராளிகளாக மாறி ஏதேதோ செய்து கிராமத்தை மீட்கிறார்கள்..
ஒட்டு மொத்த படத்தில் மூப்பன் கேரக்டரில் வரும் நாசர் தன் அனுபவப்பட்ட நடிப்பால் தனி ஸ்கோர் செய்கிறார். கிராமத்து இளைஞர்களாக வரும் மகேந்திரன், வினோத், அவர்களுடன் ஜோடி சேர்ந்து வரும் தனு ஷெட்டி, ஐஸ்வர்யா தங்களால் முடிந்த அளவு சரியாக செய்திருக்கிறார்கள். அதே சமயம் அமைச்சராக வரும் புரொடியூசர் ஸ்ரீனிவாசப்பா – ஐயோ போதும்ப்பா..
ஆரம்பத்தில் சொன்னது போல் இதே கருத்தை மையமாக கொண்டு பல படங்கள் வந்திருந்தாலும் இதில் கோர்ட்டில் நாடக சீன் எல்லாம் போட்டு தனித்துவம் காண்பிக்க முயன்றுள்ளார்கள். ஆனால் திரைக்கதை பின்னலில் அக்கறை செலுத்தாததால் தியேட்டரை விட்டு வரும் போது இஞ்சி தின்ற முகத்தோடு வர வேண்டி இருக்கிறது.