சென்னை செஸ் ஒலிம்பியாட் : பிரதமர் தொடங்கி வைத்தார்!- வீடியோக்கள்!

சென்னை செஸ் ஒலிம்பியாட் : பிரதமர் தொடங்கி வைத்தார்!- வீடியோக்கள்!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதிவரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா இன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்த 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இன்று தொடங்கி (ஜூலை 28) வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்த விழாவில், போட்டியில் பங்கு பெரும் அனைத்து நாட்டினரும், தங்கள் கோடியை மற்றும் நாட்டின் பெயர் பொருந்திய பதாகைகளை ஏந்தி அணிவகுத்தனர். மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 186 பேர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.அவர்கள் பன்னாட்டு வீரர்களை வழிநடத்தி சென்றனர்.

இதையடுத்து இந்த விழாவிற்கு வந்தவர்களை சிறப்பிக்கும் வகையில், இந்தியா பன்முகத்தன்மை கொண்டது என்பதை நிரூபிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நடனக்கலைஞர்கள் பாரம்பரிய நடனத்தை நடமாடி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து பிரபல இளம் இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம், பியானோ வாசித்து அசத்தினார். வழக்கம்போலவே தனது டிரேட்மார்க்கான வேகமாக பியானோ வாசிக்கும் திறமையை வெளிப்படுத்திய லிடியன் நாதஸ்வரம், அதன்பின்னர் இருகைகளிலும் இருவேறு இசைகளை இசைத்தார்.

ஒரு கையில் ஹாரி பாட்டர் மற்றும் மற்றொரு கையில் மிஷன் இம்பாசிபிள் ஆகிய திரைப்படங்களின் இசைகளை இசையமைக்க போவதாக அறிவித்த உடனேயே, வெளிநாட்டினர் எல்லாம் மிரண்டுவிட்டனர். பின்னர் அவர் இரு கைகளிலும் இருவேறு இசையை, தனக்கே உரிய வேகத்துடன் மிரட்டலாக வாசித்ததும், அதைக்கண்டு வெளிநாட்டினர் அனைவரும் வியந்துபோனார்கள்.

தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது

error: Content is protected !!