‘உலகளவில் தடுக்கக் கூடிய நோயால், 5 வயதுக்குட்பட்ட 15 ஆயிரம் குழந்தைகள் தினமும் இறக்கின்றனர்’’ என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியம் (யுனிசெப்), உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி ஆகியவை இணைந்து எடுத்த புள்ளிவிவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
உலகளவில் கடந்த 1990-ம் ஆண்டு 12.6 மில்லியன் குழந்தைகள் இறப்பு என்ற நிலை இப்போது கணிசமாக சரிந்துள்ளது. எனினும், தடுக்கக் கூடிய நோயால் 5 வயதுக்குட்பட்ட 15 ஆயிரம் குழந்தைகள் தினமும் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பெரும்பாலும் சில ஆப்பிரிக்க நாடுகள், தெற்காசிய நாடுகள் சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதில் பின்தங்கி உள்ளன.
நிமோனியா, வயிற்றுப் போக்கு, மலேரியா போன்ற தடுக்கக் கூடிய நோய்களாலேயே தினமும் 15 ஆயிரம் குழந்தைகள் இறப்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஊட்டச் சத்து குறைபாடுதான் பெரும்பாலான இறப்புக்கு காரணமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நிலவரப்படி 1000 குழந்தைகளில் 79 குழந்தைகள் இறப்புடன் சகாரா பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள ஆப்பிரிக்கா முதலிடம் வகிக்கிறது. அதேபோல் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோபியா, சீனா, நைஜர் போன்ற நாடுகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் 2017 முதல் 2030-ம் ஆண்டுக்குள் 60 மில்லியன் குழந்தைகள் இறக்க நேரிடும்.
அதேபோல் சில ஆசிய நாடுகளில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்வது, உணவு, மருத்துவ சிகிச்சை போன்ற விஷயங்களில் ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பது போன்றவற்றால் பெண் குழந்தைகளின் இறப்பு தெற்காசிய மறறும் மேற்காசிய நாடுகளில் அதிகமாக உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.- ஏஎப்பி