இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களின் ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’ சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் திரைப்படம் ‘மேயாத மான்’. வைபவ் ரெட்டி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் இத்திரைப்படம், சில ஆண்டுகளுக்கு முன் ‘மது’ என்கிற பெயரில் 30 நிமிட பைலட் ஃபிலிம் ஆக வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. படம் ஆரம்பித்த நாளிலிருந்தே போஸ்டர், டிரைலர், பாடல்கள் என வெளியான ஒவ்வொரு ப்ரோமோவுமே புதுமையாகவும் ரசிக்கும்படியும் இருந்தது. தீபாவளி வெளியாடாக ‘மெர்சல்’ என்கிற மிகப்பெரிய படத்துடன் வெளியாகும் ‘மேயாத மான்’ ரசிகர்களை திருப்திபடுத்துமா? தொடர்ந்து படியுங்கள்.

தன்னுடன் கல்லூரியில் படித்த மதுமிதாவை (ப்ரியா பவானி சங்கர்) மூன்று வருடங்களுக்கும் மேலாக உருகி உருகி ஒரு தலையாக காதலித்து வருகிறார் முரளி (வைபவ்). ஆனால், மதுவிற்கு முரளி மேல் எந்த அபிப்ராயமும் இல்லை. திடீரென மதுவுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட, தற்கொலை செய்ய முயற்சிக்கிறார் முரளி. அதன் பின்னர் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதைச் சுருக்கம்.

ரொம்பவே கலாட்டாவான ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை ரசிகர்களுக்கு அளிக்க முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ரத்னகுமார்; அதில், பெரும்பாலும் வெற்றியும் பெற்றிருக்கிறார். ‘இது ராயபுரத்து La La Land’ என இப்படத்தை விளம்பரப்படுத்தி இருந்தார்கள், அது உண்மைதான் என தோன்றும்படியான ஒரு படமாக இருக்கிறது ‘மேயாத மான்’. தற்கொலை செய்ய மாடி மேல் நிற்கும் முரளியிடம் ‘சீக்கிரம் குதிங்க, இருட்டுனா தெரியாது’ என சொல்லும் ஏரியா வாண்டுகள், ‘எங்க ஏரியா குத்துவிளக்கு’ கானா பாடல், முரளிக்காக எதையும் செய்ய துணியும் நண்பர்கள், முரளிக்கு ‘இதயம்’ பட ரிங்டோன் வைத்திருக்கும் வினோத் என கதை நடக்கும் இடத்தையும் அந்த இடம் சார்ந்த மனிதர்களையும் அழகாகவே நமக்கு அறிமுகம் செய்கிறார் இயக்குனர். அது போக பாடல்கள், வசனம் என எல்லா விஷயத்திலும் ஏதோ ஒன்றை வித்தியாசமாக முயற்சித்திருப்பது மற்றும் பல சின்ன சின்ன ஐடியாக்கள் மூலம் (முரளிக்கு காதல் வந்ததும், சுவற்றில் காயும் சாணி கூட இதய வடிவத்தில் இருப்பது) என படம் முழுக்க ஆங்காங்கே கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.

இப்படத்தின் ஆணிவேரே ‘இதயம்’ முரளி என்கிற ஹீரோ கதாபாத்திரமும் அவன் நடந்து கொள்ளும் விதமும் தான். தற்கொலை செய்ய நினைக்கும் பொழுது கூட ‘நான் செத்தாலும் அவன் மாட்டணும்ன்னு தான், காமர்ஸ் வாத்தியார் வீட்டு மாடியில நிக்குறேன்’ என சொல்வது, குடித்துவிட்டு ஷேக்ஸ்பியர் தத்துவங்களை உளறுவது, தொலைபேசி அழைப்பில் மதுவும் இருக்கிறாள் என தெரியாமல் காதல் கவிதை சொல்கிறேன் என திட்டுவது, கல்யாண ரிசப்ஷனில் ‘கோலங்கள்’ ‘மெட்டி ஒலி’ பாடல்கள் எல்லாம் பாடுவது, ‘அப்படியே வாயை வெச்சா ஜலத்தை குடிப்பீங்க?’ என்கிற கேள்விக்கு ‘ஆமா, நீங்க எதை வெச்சு குடிப்பீங்க?’ என கேட்பது, தங்கையிடம் கோபத்தில் பேசும்பொழுது ‘வினோத் பொண்டாட்டிக்கிட்ட ஃபோனை குடு’ என கெத்து காட்டுவது என முரளியின் கதாபாத்திரம் ரகளையாக படைக்கப்பட்டுள்ளது. வைபவ் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போகிறார்.

ஹீரோ வைபவ்வைத் தாண்டி அதிகம் ஈர்ப்பவர், மொத்த படத்திலும் ஸ்கோர் செய்பவர் வினோத்தாக வரும் விவேக் பிரசன்னா. ‘சேதுபதி’, ‘விக்ரம் வேதா’, ‘மாநகரம்’, ‘’பீச்சாங்கை’ என இதற்கு முன் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இப்படத்தில் ரொம்பவே இயல்பாக, எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும்படியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நண்பனின் தங்கை தன்னை தவறாக நினைத்துவிட்டாலோ என மருகுவது, நண்பனைக் காப்பாற்ற மது வீட்டிற்கு சென்று கெஞ்சுவது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முரளியை உடனிருந்து கவனித்து கொள்வது, சுடருக்காக வரன் பார்த்து வந்த பின் முரளி சொன்ன பதிலுக்கு என்ன சொல்வதென தெரியாமல் கிளம்புவது, கிளைமாக்ஸில் மண்டபத்தில் வந்து பிரச்சினை ஏற்படுத்த நினைப்பது என ஒவ்வொரு காட்சியிலும் அப்ளாஸ் அள்ளும் இந்த மனிதர் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல குணச்சித்திர நடிகரும் நகைச்சுவை நடிகரும் கிடைத்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். இவர் தமிழ் சினிமாவில் இன்னும் பல உயரங்கள் தொடுவார் என எதிர்பார்க்கலாம். ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஹீரோ தங்கையாக வரும் இந்துஜா இருவருமே தங்கள் பாத்திரத்தின் தேவையை உணர்ந்து, எந்த குறைகளும் கூற முடியாத அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளனர்.

பாத்ரூமுக்குள் யார் இருப்பது என தெரியாமல் ‘யாராவது ஜெண்ட்ஸை கூப்பிடலாமே’ என சொல்லும் பிரியங்கா, ‘கலையரசன்… உங்களுக்கு இந்த பேரு சின்ன வயசுலேயே வெச்சுட்டாங்களா?’ என கேட்கும் மெக்கானிக் சிறுவன் என அவ்வப்பொழுது தோன்றி மறையும் சின்ன சின்ன பாத்திரங்கள் கூட கைத்தட்டல்கள் பெறுகின்றன. ‘எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கிறதையே மறந்துட்டேன்’ என கிளைமாக்ஸில் தங்கை சொல்வது, ‘வயித்துக்கே சோறு இல்ல… அப்புறம் எங்க வயித்துக்கு கீழேயும் மேலேயும் பத்தி யோசிக்குறது?’, ‘அது அது சாவும்பொழுது கால் இருந்துச்சான்னே தெரியல’ போன்ற வசனங்களும் ஆங்காங்கே கவனத்தை ஈர்க்கின்றன.

முதல் பாதியின் கடைசியில் வரும் தங்கச்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் படம் எங்கோ சம்பந்தமில்லாமல் நகர்கிறதே, படம் எதை நோக்கி தான் நகர்கிறதோ என்கிற கேள்விகளை தந்தாலும், இரண்டாம் பாதியில் தங்கச்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் கதையுடன் அழகாக இணைக்கப்பட்டுள்ளன. அதே போல, இது ஒரு தலைக்காதல் பற்றிய கதை என்கிற ஒரே காரணத்திற்காக ‘ஒன் சைட் லவ் பண்ற பசங்க தான் பொண்ணுங்க முகத்தைப் பார்த்து பேசுவாங்க’ என்கிற ரீதியில் அளவுக்கு மீறி மகிமைப்படுத்தியதெல்லாம் உறுத்தல் தான் (சிவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்’ என்கிற வடிவேலு நகைச்சுவை தான் ஞாபகத்திற்கு வந்தது).

விது அயன்னாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம், கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல அவ்வளவு அருமையாக படமாக்கப்பட்டிருந்தது. பிரதீப் மற்றும் சந்தோஷ் நாராயனின் பாடல்களும் பின்னணி இசையும் தான் இப்படத்தின் பெரும்பலம் மற்றும் யு.எஸ்.பி.யும் கூட! வித்தியாசமான ஐடியாவோடு உருவாகியுள்ள இப்படத்தின் ஒவ்வொரு பாடலும், படம் வெளியாவதற்கு முன்னே பேசப்பட்டது. இருப்பினும் கூட ‘தங்கச்சி’ பாடலும் ‘அட்ரஸ்’ பாடலும் தவறாக பொருத்தபட்டிருந்ததால், பெரும் குறையாகவே தெரிந்தது. படத்துடன் பார்க்கையில் ‘அட்ரஸ்’ பாடல் ரொம்ப வழக்கமானதொரு ‘டாஸ்மாக்’ பாடலாக மட்டுமே தோன்றியது.

குறைகள் எல்லாவற்றையும் தாண்டி, ‘மேயாத மான்’ படத்தை கண்டிப்பாக ஒரு முறை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் 🙂

error: Content is protected !!