அன்னக்கிளி படத்தை வாங்கி ரிலீஸ் பண்ண அப்போ ஆளில்லை!

அன்னக்கிளி படத்தை வாங்கி ரிலீஸ் பண்ண அப்போ ஆளில்லை!

மிகச்சரியாக 44 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1976ல் மே 14ல் சிவகுமார், சுஜாதா நடித்த அன்னக்கிளி திரைப்படம் ரிலீஸ் ஆனது. தேவராஜ் -மோகன் என்ற இரட்டை இயக்குனர்கள் இப்படத்தை இயக்கி இருந்தார்கள். இப்படத்தின் மூலம்தான் இளையராஜா என்ற மாபெரும் இசைக்கலைஞர் திரை உலகத்துக்கு கிடைத்தார். காலம் சென்ற பஞ்சு அருணாசலம் இப் படத்தை தயாரித்து இருந்தார்.படத்தின் கதையை இப்பட இயக்குனர்கள் திறம்பட இயக்கி இருந்ததால் சிறந்த மாநில மொழிப்படங்களுக்கான தேசிய விருதை இப்படம் பெற்றது. முதல் பாடலான மச்சானை பார்த்திங்களா தொடங்கி, சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை, அன்னக்கிளியே உன்னை தேடுதே, போன்ற பாடல்கள் மிக புகழ்பெற்றன. முக்கிய மாக முத்து சம்பா பச்ச நெல்லு குத்ததான் வேணும் என்ற பாடல் அந்நாளைய திருமண வீடுகள் அனைத்திலும் போட்டி போட்டு ஒலித்த பாடல்கள் ஆகும். முதல் படத்திலேயே டாப் கியரில் பறந்தார் இளையராஜா. இப்படத்தின் பிரதானமாக பேசப்பட்டதே இசையும் பாடல்களும்.

இப்பேர்ப்பட்ட  அன்னக்கிளிப் படத்தைப் பற்றி நம் கட்டிங் கண்ணையா வழங்கிய சிறப்பு ரிப்போர்ட் இதோ:

‘அன்னக்கிளி’ படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றின் போக்கையே திசை திருப்பி விட்ட ஒரு படமாகும். அதற்கு முன்னர் சில ஆண்டுகளாக ஒரு தேக்க நிலையில் இருந்த நிலைமை மாறி, கிராமிய மணம் கமழும் கதையும், இசையும் பாடல்­க­ளும் இருந்­தால் படம் வெற்றி பெறும் என்பதை நிரூபித்து மற்றவர்களுக்கு வழிகாட்டிய படம் ‘அன்னக்கிளி’ அதற்கு முன்னர் சிறிது காலமாகத் தமிழ்ப் படங்கள் நான்கு வாரங்கள் கூட ஓடாமல், பட உலகமே சோர்ந்து போயிருந்த நிலையில் ‘அன்னக்கிளி’ படம் 100 நாள்களைத் தாண்டி வெள்ளி விழாவையும் கொண்டாடியபோதுதான், அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையே ஏற்பட்டது.

இந்த அன்னக்கிளி ரிலீஸ் குறித்தும் இளையராஜா பற்றியும் வசனகர்த்தா செல்வராஜ் சொன்னது இதோ:

“அன்னக்கிளி” என்ற கதையின் ஆரம்ப விதை விழுந்த நேரத்திலேயே அதற்கு என் பால்ய நண்பன் இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். தி.நகரில் இப்போது பஸ் ஸ்டாண்ட் இருக்கும் இடம் அப்போது வெறிச்சோடிக் கிடக்கும். அங்கே சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிரே “கிளப் ஹவுஸ்” இருந்தது. அது சினிமா ஆர்வலர்களின் சொர்க்கம். நாகேஷ், ஸ்ரீகாந்த் போன்ற பலரும் அங்கே தங்கியிருந்து தான் வாய்ப்புத் தேடினார்கள். நாள் வாடகை 10 ரூபாய். “சூடிக் கொடுத்தாள்” கதை அங்கே திரை வடிவமாகிக் கொண்டிருந்த வேளையில் இளையராஜா பற்றிப் பஞ்சுவிடம் சொல்லியிருந்தேன். அழைத்து வரச் சொல்லியிருந்தார்.

சொன்னபடி, தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு இளையராஜா, பாஸ்கர் ஆகிய இரண்டு பேரும் வந்து விட்டார்கள். அவர்களை அந்த லாட்ஜுக்கு அழைத்துச் சென்றேன். “கொஞ்சம் இருங்கள்” என அவர்களை ரிசப்ஷனில் உட்கார வைத்து விட்டுப் பஞ்சுவிடம் போய் விஷயத்தைச் சொன்னேன். வரச் சொன்னார். அப்போது டிரிங்க் பண்ணிக் கொண்டிருந்த பஞ்சு “ட்ரிங்க் பண்ணுவீங்களா?” என்று நாகரிகம் கருதி ராஜாவிடம் அவர் கேட்டார். நான் பதறிப் போய் “அவனுக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்லை” என்று சொன்னேன். பஞ்சு நம்பிக்கையாகப் பேசி வழியனுப்பி வைத்தார். ராஜாவையும் பாஸ்கரையும் பஸ் ஏற்றி விட பஸ் நிலையத்துக்கு வந்தேன்.

ராஜா முகம் இறுக்கமாக இருந்தது. “அவர் தான் கூப்பிட்டாரே, நீ ஏன் வேணாம்னு சொல்லிட்டே?” என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான். வாய்ப்புக் கேட்க வந்த முதல் நாளே இப்படி ஆரம்பிப்பது சரியாக இருக்காது என்று எடுத்துச் சொன்ன பிறகு தான் இறங்கி வந்தான். அடுத்த சந்திப்பு கம்போஸிங் நோக்கி மெல்ல நகர்ந்தது. “அன்னக்கிளி” கதைக்கு நான் முதலில் வைத்திருந்த தலைப்பு “மருத்துவச்சி.” பஞ்சு அருணாசலத்திடம் கதையைச் சொன்னேன். ஆண்டாளின் பக்தியைக் காதல் தியாகம் போலச் சொல்லியிருந்த கதை அது. எனவே “சூடிக் கொடுத்தாள்” எனப் பெயர் வைக்கலாம் என்று அவர் யோசனை சொன்னார். இந்த நேரத்தில் தான் இளையராஜா இந்தக் கதையைக் கேட்டு விட்டு ஹார்மோனியத்தில் தன் புதிய தேவ கானத்தை இசைத்தான். அவனாகவே “அன்னக்கிளி உன்னைத் தேடுதே” என ஒரு வரியைப் போட்டு மெட்டுப் போட்டு பாடினான். அதைக் கேட்டதும் “அட, இது நல்லா இருக்கே” எனப் படத்தின் பெயரையே “அன்னக்கிளி” என மாற்றினார் பஞ்சு.

“அன்னக்கிளி” ரிலீஸ் ஆன சமயத்தில் நடந்த களேபரங்கள் தனிக் கதை. அந்தப் படத்தின் செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களின் உரிமையை வாங்குவதாகச் சொன்னவர் பெட்டி எடுக்க வரவே இல்லை. நானும் பஞ்சுவும் தவித்துப் போய் உட்கார்ந்து இருந்தோம். படத்தை வாங்குவதற்காகப் புறப்பட்டு வந்த நேரத்தில் வழியில் அவருடைய கார் பஞ்சர் ஆகி விட்டதாம். சென்டிமென்ட்டாக நினைத்து அவர் அப்படியே திரும்பிப் போய் விட்டார். நடிகர் சிவகுமார் அட்வான்ஸாக வாங்கிய சம்பளத்தோடு சரி. நாங்கள் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு மீதிப் பணம் வேண்டாம் எனச் சொல்லி விட்டார். ஆனாலும் படத்தை எப்படி ரிலீஸ் செய்வதென்று குழம்பிப் போய் இருந்தோம்.

அப்போது ஒருவர் படத்தை வாங்க வந்தார். படத்தைப் போட்டுக் காட்டுவதற்குக் கூட நேரம் இல்லை. “கதையை மட்டும் சொல்லுங்கள்” என்றார். முழுக் கதையையும் அவரிடம் சொன்னேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. வாங்குவதாகப் பணத்தையும் கொடுத்தார். படம் ரிலீஸ் ஆனது. ஒரு வாரம் தியேட்டரில் ஈ ஆடியது. பல தியேட்டர்களில் முதல் வாரத்திலேயே தியேட்டரை விட்டுத் தூக்கப் போவதாகச் சொல்லி விட்டார்கள். ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்த “மேயர் மீனாட்சி” என்ற படத்தை வெளியிடவும் முடிவு செய்து விட்டார்கள். நானும் பஞ்சுவும் சென்னை “ராஜகுமாரி” தியேட்டர் வாசலில் போய் நிற்போம். திரும்பி வருவோம். ஒரு வாரம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை அன்று தியேட்டருக்குப் போனேன். கவுன்ட்டரில் சொல்கிறார்கள்: “இன்னும் மூணு டிக்கெட் மட்டும் இருக்கிறது. அதை விற்று விட்டால் ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டு விடலாம்.”

மூன்று டிக்கெட்களை வாங்கக் கையில் காசு இல்லை. என் வீடு எல்டாம்ஸ் ரோடில் தான். அங்கிருந்து சைக்கிளில் வேகமாக வீட்டுக்குப் போய் மூன்று டிக்கெட்களுக்கான காசை எடுத்து வந்து கட்டினேன். தியேட்டர் வாசலில் முதன் முதலாகக் ஹவுஸ்ஃபுல் போர்டு. சந்தோஷம் தாளவில்லை. அதன் பிறகு அடுத்த 28 வாரங்களுக்கும் தியேட்டரில் அந்த போர்டு நிரந்தரமாக இருந்தது. படத்தை வாங்கிய அத்தனைப் பேரும் பணத்தை அள்ளினார்கள். அதே சூட்டோடு சிவகுமார், பஞ்சு, இளையராஜா, காம்பினேஷனில் அடுத்து இன்னொரு படத்தைத் தொடங்குவதாகத் திட்டம். “கவிக்குயில்” பிறந்தது.

 

error: Content is protected !!