கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 4 லட்சத்து 39 ஆயிரம் பேர் பதிவு!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 4 லட்சத்து 39 ஆயிரம் பேர் பதிவு!

தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 11 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் இடங்களில் முன்னேற்பாடு பணிகளை டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். காத்திருப்பு அறை, நுழைவாயில், வெளியேறும் பகுதி கண்காணிப்பு அறைகள் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது:–

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று தற்சமயம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோய் தொற்றிற்கு வரும் 16–ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் 826 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் இடங்களாக 166 மையங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, ராதாபுரம் மற்றும் சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என நான்கு தடுப்பூசி போடும் இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 ஆயிரம் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது, 5 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. மேலும் அவைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு முதலில் சுகாதார பணியாளர்கள் என ஜனவரி 25ம் தேதி வரை பதிவு செய்தவர்களுக்கு இந்த தடுப்பூசியானது போடப்படும்.

தற்சமயம் கொரோனா நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிக மிக குறைந்துள்ளது. இதற்காக உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். பொது மக்கள் அனைவரும் கொரோனா நோய்த் தொற்றினை முற்றிலும் ஒழித்திடும் வகையில் முகக்கவசம், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியினை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 11 பேர் தடுப்பூசி போடுவ தற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் 2.9 கோடி மக்களுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. எனவே தடுப்பூசியை கண்டு அச்சம் வேண்டாம். நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி ஒரு மைல்கல். உருமாறிய கொரோனாவால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. இதுவரை தமிழகத்தில் நான்கு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களும் தற்போது குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தேசிய அளவில் தடுப்பூசி பணியை பிரதமர் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா தடுப்பூசி மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார். அதன் பிறகு நிர்ணயிக்கப்பட்டுள்ள மையங்களில் தடுப்பூசி பணி நடைபெற உள்ளது.என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!