சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 37ம் ஆண்டு விழா!

சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 37ம் ஆண்டு விழா!

நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த தனது 100-வது, படத்தின் போது ஒரு கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். கடந்த 36 ஆண்டுகளாக தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 37-ஆம் ஆண்டு நிகழ்வு, சென்னை, வடபழனி பிரசாத் அரங்கத்தில் சிறப்பாக நடை பெற்றது. விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000வீதம் மொத்தம் இரண்டு லட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டது.

மாணவர்கள் மத்தியில், ‘ தொடக்கவுரை’ நிகழ்த்திய நடிகர் கார்த்தி, “ இது எங்கள் குடும்ப விழா”. ‘ நல்ல செயல்களை செய்’ என்று அப்பாவும் அம்மாவும் அறிவுரை மட்டும் கூறாமல், எப்படி நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும் என்பதையும் எங்கள் கண் முன்னால் செய்து காட்டினார்கள். ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டு நிகழ்ச்சியாகவே ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ நிகழ்ச்சி நடக்கும். பரிசு பெற்ற மாணவர்கள் நன்றாக படிப்பவர்கள். அவர்களிடம் ‘ நல்லா படிங்க’ என்று சொல்வதைவிட, படித்த படிப்பை சமூகத்திற்கு பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார் .

நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார். “1979ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து, ப்ளஸ்-டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.33 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுன்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது.சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடையபிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்த அளவு உயர்த்தும் என்பதனையும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன்.

தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. ஒருவன் எந்தக் குடும்பத்திலிருந்தும் வரலாம் கல்வி, ஒழுக்கம், நேர்மை இருந்தால் எந்த உயரத்துக்கும் செல்லமுடியும்.இதற்கு உயர்ந்த உதாரணங்களாக ‘சில்வர் டங் ‘சீனிவாச சாஸ்திரி, டாக்டர் அப்துல் கலாம்,மயில்சாமி அண்ணாதுரை,நீதிபதி சந்துரு ஆகியோரைக் கூறலாம். இவர்கள் எல்லாருமே ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து உயர்ந்தவர்கள்தான்.மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.” என்று கூறினார்.

சூர்யா பேசும் போது “கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்று சொல்லுவாங்க.37வருஷமா நடக்கும் இந்த நிகழ்வு அதற்கு ஒரு உதாரணம்.இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் எல்லாரும் சிறப்பான முறையில் கல்வி கற்றவர்கள். அதை சிறப்பு செய்யும்
நிகழ்வுதான் இது. குடும்ப விழாவை போல ஆண்டுதோறும் அப்பா நடத்திய நிகழ்சிகளைப் பார்த்து, எங்களுக்கும் அதே போல செய்யும் ஆர்வம் வந்தது. வேறு உதவிகளைவிட, கல்விக்கு செய்கிற உதவி ஒருவருக்கு காலத்திற்கும் பயன்படும். அதனால்‘சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ பணியையும் சேர்த்து கல்விப் பணியை விரிவாக்கிக் கொண்டோம். அப்பா செய்த பணிகளிலிருந்து சில மடங்காவது அதிகமாக செய்தால் அது வளர்ச்சி.

அகரம்ஃபவுன்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது.1300 – க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரிக் கனவை, பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம்.சமூகத்திற்குத் தேவையான பல்வேறு சவால்கள் இருந்தாலும், கல்வி அதில் மிக முக்கியமான ஒன்று. உணவு, உடை,இருப்பிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகளோடு கல்வியும் சேர்ந்து விட்ட ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.கடந்த ஆண்டு முதல் தை திட்டத்தின் மூலம் படிப்புக்கு மட்டுமின்றி தொழிற்கல்விக்கு முன்னுரிமை தரும் வகையில் பள்ளிக் கல்வியை இடைநின்ற மாணவர்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு 40 மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி அளிக்கிறோம்.

அகரம் கல்வி அறக்கட்டளை, ‘விதை’ திட்டத்தின் கீழ் பண உதவி மட்டுமின்றி மாணவர்கள், நம் சமூகத்தை தன்னம்பிகையோடு எதிர்கொள்ளத் தேவையான பல்வேறு பயிற்சிகளையும், சிறந்த நிபுணர்களின் துணையோடு அளித்து வருகிறது.பல்வேறு திசைகளிலும் பயணப்பட்டு, ஏழை மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை, ஒருங்கிணைக்க முயற்சி எடுத்து வருகிறது அகரம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை தங்களுக்கு தெரிந்த ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நாம் செய்கிற ஒவ்வொரு நல்ல காரியமும், ஒரு விளக்கு கொண்டு இன்னொரு விளக்கை ஏற்றும் முயற்சி. இங்கே சிறப்பு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களால் முடிந்த நல்ல காரியங்களில் கல்வி கற்கும் காலத்தில் இருந்தே ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார் சூர்யா.

பேராசிரியர் கல்யாணி திட்டங்களையும் உதவிக்காகத் தேர்வு செய்யப்படும் நடைமுறைகளையும் விளக்கிப் பேசினார். முன்னதாக சிவகுமாரின் மகள் பிருந்தா சிவகுமார், நிகழ்ச்சியை இறை வணக்கம் பாடித் தொடங்கி வைத்தார். பரிசு பெற்ற மாணவர்கள் ஏற்புரை வழங்க, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அகரம் முன்னாள் மாணவி ஹேமா.

இறுதியாக வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. பரிசு பெற்ற பல மாணவர்கள் மேடையில் பேசமுடியாமல் நா தழுதழுத்தனர். சிலர் கண் கலங்கினர். அவை எல்லாமே ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். பேசிய போது வெளிப்பட்ட சிலரது குடும்பப் பின்னணியை அறிந்த பார்வையாளர்களும் கண் கலங்கினர். மொத்தத்தில் இந்நிகழ்ச்சி நெகிழ்ச்சி மிக்கதாய் இருந்தது மட்டும் உண்மை

error: Content is protected !!