September 18, 2021

கடல் கழிவை வாளியால் க்ளீன் பண்ணும் நாம் வல்லரசாவோமோ?

மேலைநாடுகளின் அணுக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டும் குப்பைத் தொட்டிகளாக இந்தியாவின் கடல்கள் மாறி பல்லாண்டுகள் ஆகிவிட்டன. அனைத்தும் அரசின் ஒப்புதலுடன் நடைபெற்று வருகின்றன.பெரும் கப்பல்களில் டன் கணக்கில் கொண்டு வந்து கொட்டப்படும் இத்தகைய கழிவுகளால் அந்தக் கடலோரங்களின் தூய்மையும் சுகாதாரமும் சீர்கெட்டு, அம்மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, ஏகப்பட்ட மரணங்கள் நிகழ்ந்துவருகின்றன.லண்டன், மலேசியா, வளைகுடா நாடுகள், கிரீஸ் போன்ற நாடுகளில் இருந்து நாப்கின்கள், ஊசிகள், எண்ணெய் கேன்கள், இன்னும் சூழலுக்கும், மனிதர்களுக்கும் பேராபத்து ஏற்படுத்தக்கூடிய கழிவுகள் கப்பல்கள் மூலம் இந்திய துறைமுகங்களில், குறிப்பாக தூத்துக்குடி துறைமுகத்தில் வந்திறங்கி பல முறை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

edit feb 7

தமிழகத்தில் உள்ள காகித தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள் போன்றவை குறைந்தவிலையில் இது போன்ற கழிவுகளை சட்டத்திற்கு புறம்பாக வாங்கி பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.பெட் பாட்டில்களை உள்நாட்டில் மறுசுழற்சி செய்ய அனுமதிக்காத அமெரிக்கா, இந்தியாவிற்கு அனைத்து பெட் பாட்டில்களையும் மறுசுழற்சிக்காக அனுப்புகின்றது என்பது பலரும் அறியாத விஷயம்.தங்களது திடக் கழிவுகளை வீசியெறியும் குப்பைத் தொட்டியாக இந்தியாவை வளர்ந்த நாடுகள் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அவர்களது நாடுகளில் அவற்றை மறுசுழற்சி செய்வதற்கு ஆகும் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவழித்தால் இந்தியாவிற்கு அவற்றை நாடு கடத்திவிடலாம்.

நமது துறைமுகங்களிலும், உள்ளே இருக்கும் பொருட்கள் என்ன என்று துல்லியமாக காட்டும் கருவிகள் பற்றாக்குறை உள்ளதுடன், நமது சூழல் பாதுகாப்பு சட்டங்கள் இது போன்று பிடிபடுபவர்களை தண்டிக்க போதுமானதாக இல்லை.அது மட்டுமல்ல, இந்த கழிவுகளை பிரித்து எடுத்து பயன்படுத்தும் அடித்தட்டு மக்கள் அபாயகரமான நோய்களையும் பெறுகின்றனர்.அதோடு நில்லாமல் வெளிநாடுகளில் பயனற்றுப்போகும் கப்பல்களை உடைப்பதும் இந்தியாவின் கடலோரங்களில்தான். இந்த தொழிலில் ஈடுபடும் மக்கள் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு ஆளாகின்றனர்.

நம் நாட்டு மருத்துவமனைகளேகூட, தங்களது மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளைத் தரம் பிரித்து அப்புறப்படுத்துவது இல்லை.பொதுவான குப்பைகளோடு குப்பையாக அவற்றை வீசியெறியப்படும் அவலம் நடைபெற்று வருகிறது. இதில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை இரண்டிற்கும் வேறுபாடெல்லாம் கிடையாது.பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சோதனைக்குழாய்கள், மருத்துவமனை, ஆய்வகம், பல் மருத்துவமனை போன்ற இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை தரம்பிரித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்திய உயிர்கழிவு மேலாண்மை சட்டப்பிரிவு 1998-ம் 2016-இல் ஏற்படுத்தப்பட்ட சட்டத்திருத்தமும் தெளிவாக வரையறுத்துள்ளது.இதுபோன்ற கழிவுகள் கடலில் கொட்டப்படுவதால், அலைகளில் அடித்து எங்கோ ஒரு இடத்தில் கரையில் ஒதுங்கி, அதன் மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் சாலைகளில் திரியும் மாடுகள் மருத்துவக் கழிவுகளை உட்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன இதன் மூலம் இறைச்சி, பால் உண்ணும் மனிதனுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குஜராத்தில் நடந்த ஒரு ஆய்வில் 26 மருத்துவர்களும், 43 மருத்துவ ஊழியர்களும் உயிர்மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறியவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இவற்றையெல்லாம்விட மோசமான ஒன்று அணு உலை. அணு உலைகளைச் சுற்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிறு கவனக்குறைவு போதும், சுற்றியுள்ள பல கிலோமீட்டர்கள் புற்பூண்டு முளைக்கக்கூட தகுதியற்ற நிலமாய்க் கருகிவிடும். போபால் சம்பவம் தலைமுறையைக் கடந்த நிற்கும் ஒரு சான்று.உலகின் வல்லரசு நாடுகள் எல்லாம் சூரிய ஒளி, நீர் போன்ற மாற்று வழிமுறைகளை மின்சாரத்திற்காகப் பயன்படுத்த ஆரம்பித்து, ஏற்கெனவே இருக்கும் அணு உலைகளை மூடி வருகின்றன. இந்த நிலையில் நமது அரசோ புதிது புதிதாக அணு உலைகளை அமைத்துக் கொண்டே செல்கின்றது.

இன்னும் ரஷியா, கனடா போன்ற தேசங்கள் தங்களது அணு உலைகளை இந்தியாவில் கடைபரப்ப காத்திருக்கின்றன.தற்போதுகூட ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சின் அளவு அதிகரிப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் அந்நாட்டு அரசு கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கின்றது. அந்த அணு உலையில் மனிதர்கள் இன்றி ரோபோக்கள் மூலமாகவே வேலை நடந்துவருகின்றது.ஆனால் ஒரு மிகப்பெரிய கடல்பரப்பில் கொட்டப்பட்ட எண்ணெயை அப்புறப் படுத்த வாளிகளை நம்பியிருக்கும் நம் தேசத்தின் நிலை என்னவாகும் என்று நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆர். அபுல் ஹசன்