October 20, 2021

36 ஆண்டுகளுக்கு முன்னாள் வெளியான் “16 வயதினிலே” ரீ -ரிலிஸ் முன்னோட்டம்

பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம் ‘16 வயதினிலே‘.கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்னாள் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்திருந்த இப்படம், தற்போதுடிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.
5 -cine 15
விழாவில் நடிகர் பார்த்திபன் பேசும் போது,”சமீபத்தில் தங்கம் எப்படி உருவாகுதுங்கிற விஷயத்தை படிச்சேன். அது என்னன்னா ரெண்டு அற்புதமான ரெண்டு நட்சத்திரங்கள் மோதுனதுலான தான் தங்கம்ங்கிற ஒரு மெட்டலே உருவாகுதாம். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிங்கிற நட்சத்திரமும், உலக நாயகன் கமல்ங்கிற நட்சத்திரமும் மோதிதான் ’16 வயதினிலே’ மாதிரியான படங்கள் நமக்கு தங்கத்தை விட விலை உயர்ந்த படங்களா கெடைச்சிருக்கு.

கமல் சாரைப் பத்தி சமீபத்துல நான் தெரிஞ்சிக்கிட்ட விஷயம் என்னன்னா… அவர் மதுவுக்கு அடிமையான இருப்பாருன்னு நான் நம்பவே இல்ல. சமீபத்துல நடந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில ‘மது’ன்னு ஒரு மலையாள நடிகர் வந்திருந்தாரு. அந்த விழா மேடையில அவரோட காலைத்தொட்டு கமல் சார் வணங்கினாரு..கமல் சாரோட அந்தப் பண்பு தான் அவரை இன்னும் உயர உயர கொண்டுபோய்க்கிட்டிருக்கு. அதனால தான் அவர் உலகநாயகன்னு பேர் வாங்கியிருக்காரு.

நான் ரஜினி சாரோட தீவிரமான ரசிகன். அவர் ‘கோச்சடையான்’ படத்துக்கப்புறம் ‘பரட்டை’ மாதிரி ஒரு கேரக்டர்ல நடிக்கணும். ரொம்ப எளிமையா, ரொம்ப சிம்பிளா ரொம்ப ஜாலியா ஒரு கேரக்டர் பண்ணனும். இது ரசிகர்களோட ஆசை. அதேமாதிரி மறுபடியும் ரஜினி சாரும், கமல் சாரும் சேர்ந்து ஒரு படத்துல நடிக்கணும்.” என்றார்.

விழாவில் உலக நாயகன் கமல் கலந்து கொண்டு பேசும்போது”இந்தப்படத்தின் வெற்றியைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் இதில் வேலை செய்தவர்களுக்கு எத்தனை தன்னம்பிக்கை என்பதை அப்போதும் பார்த்து வியந்திருக்கிறேன், இப்போதும் பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு பாரதிராஜாவை உதவி இயக்குனராகத் தெரியும். யாராவது “பாரதிராஜா மாதிரி கிராமத்துல இருந்து வந்துருக்கான்”னு யாராவது சொன்னா எனக்கு பயங்கரமா கோபம் வரும். ஏன்னா அவர் அதிர்ஷத்துல இந்த இடத்துக்கு வரல. அவரோட உழைப்பால தான் வந்திருக்கார்.

இந்தப்படத்தின் கதைக்கு மயில் என்றுதான் டைட்டில் வைத்திருந்தார். 16 வயதினிலே படத்தின் வெற்றிக்கு விழா எடுக்கவில்லை என்று அப்போது கோபித்துக் கொண்டேன். ஆனால் 36 வருடங்கள் கழித்து விழா எடுப்பார்கள் என்று தெரிந்திருந்தால் அப்படி சிறுபிள்ளைத்தனமாக கோபித்திருக்க மாட்டேன்.

ரசிகர்கள் உட்பட நினைவலைகளில் மிதந்து கொண்டிருக்கும் அற்புதமான விழா இது. எந்த தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில் கூட படத்தில் ‘ஸ்லோமோஷன்’ காட்சியை வைக்க ஆசைப்பட்டார் பாரதிராஜா.

இந்தப்படத்தை வெற்றி பெறாது என்று சொன்னவர்கள் தான் அதிகம். அதேபோல எல்லோரும் கிண்டலடித்தார்கள். முழுசா சினிமா வியாபாரம் தெரிந்த ஒரு பண்டிதரிடத்தில் இந்தப்படத்தைக் காட்டி படம் பெருசா வெற்றி பெறும் என்று சொன்ன போது அவர் சிரித்து விட்டார். நான் அடிச்சி சொல்றேன் வெற்றி பெறாது என்று சொன்னார்.

ஆனால் அதையெல்லாம் தான் இந்தப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படி ஒருவிழா இனிமேலும் நடக்காது. நண்பர் ரஜினியெல்லாம் எங்க தங்கினார்னே எனக்குத் தெரியாது, எல்லாரும் எங்கூடத்தான் அவர் தங்கினார்னு நெனைக்கிறாங்க. ஆனா அது உண்மையில்லை. ஷூட்டிங்குக்கு வருவார், ஆனா ஷூட்டிங் முடிஞ்ச உடனே கார்ல ஏறி கெளம்பி போயிடுவாரு. ஒருவேளை வண்டியிலேயே தங்கிடுவாறோன்னு நெனைச்சுப்பேன்.

16 வயதினிலே படத்தில் நான் ரஜினியை எப்படி பார்த்தேனோ அப்படித்தான் அவர் இப்போதும் இருக்கிறார். நல்ல வேளையாக இடைத்தரகர்கள் பலர் இருந்தும் எங்களுடைய நட்பு மட்டும் அப்படியே இருக்கிறது. இதற்கான பெருமை எங்கள் இருவரை மட்டும் தான் சேரும். ஏனென்றால் நான் செய்த நட்பெல்லாம் நீங்கள் செய்த அன்பின் பலன், அவ்விடமும் இவ்விடமே இருக்கும்.

ஸ்ரீதேவியும், இளையராஜாவும் வரவில்லை. அவர்கள் வராததால் அவர்களுக்குப் பதிலாக நாங்கள் வந்திருக்கிறோம். என்னைச் சுற்றி நன்ன நண்பர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் நான் பணிவுடன் இப்போதும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.”என்று கமல் பேசினார்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் “36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ’16 வயதினிலே’ பங்ஷன்ல கலந்துக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்தப்படத்தோட புரொட்யூசர் கமல்கிட்ட ரொம்ப நெருக்கமா இருப்பாங்க, அது என்னமோ தெரியல என்கிட்ட அவ்ளோ நெருக்கமா இருக்கமாட்டாங்க. என்கிட்ட அவர் படம் தயாரிக்கணும்னு வந்து கால்ஷீட் கேட்டதே கெடையாது.

திடீர்னு ஒரு 15 நாளைக்கு முன்னால ராஜ்கண்ணு சார் எனக்கு போன் பண்ணிருக்காங்கன்னு சொன்னாங்க.., சொன்ன உடனே அப்படியா உடனே அவரை வரச்சொல்லுங்க, முதல்ல நான் அவரப் பார்க்கணும்னு சொல்லி அவரை நான் மீட் பண்ணினேன்.

அவர் எப்படிப்பட்ட மனிதர்ங்கிறதுக்கு ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்றேன். நீங்க எல்லாரும் தெரிஞ்சிக்கணும்.கமலோட ‘விஸ்வரூபம்’ படத்துக்கு ரிலீஸ் பிரச்சனை வந்தப்போ அவர் நான் ’16 வயதினிலே’ படத்தை சினிமாஸ்கோப்ல புதுப்பிச்சி ரிலீஸ் பண்ணப்போறேன். அதுல வர்ற பணத்தையெல்லாம் கமலுக்கு கொடுக்கப்போறேன்னு சொன்னார். அவரே க‌ஷ்டத்துல்ல இருக்கிறப்போ கமலுக்கு பிரச்சனை வந்தவுடனே உதவி செய்ய முன் வந்த அந்த நல்ல குணத்தைப் பார்த்து அப்போதே நான் அவரை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்.ஆனா அடுத்தடுத்து வேலைகள் இருந்ததால் அது முடியாமப்போச்சு. அப்படிப்பட்டவர் என்னை மீட் பண்ண வந்த உடனே சொல்லுங்க சார் நான் என்ன பண்ணனும்னு கேட்டேன்.

உடனே இந்த ’16 வயதினிலே’ ட்ரெய்லர் பங்ஷன்ல நீங்க கலந்துக்கணும்னு சொன்னார். பெரிய பணக்கார குடும்பத்திலிருந்து பணத்தோட சினிமாவுக்குள்ள வந்து ரொம்ப சுயமரியாதையோட படம் எடுக்க வந்தவர். ஒரு கண்ணியமான ஆள் அவர்.

ஒருத்தர்கிட்ட பணம் எவ்ளோ இருந்தாலும், சுயமரியாதை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா அவங்க சினிமாவுல இருக்கிறது ரொம்ப கஷ்டம் அப்படிப்பட்டவர் தான் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு.அவர்கிட்ட கஷ்டப்பட்டு ஒரு படத்தை ரிலீஸ் பண்றீங்க? இந்தப்பணம் உங்களுக்குத்தான் முழுசா வருதா?ன்னு கேட்டேன்.அவர் ஆமாம்னு சொன்னார். அப்போ நான் கண்டிப்பா இந்த விழாவுக்கு நான் வர்றேன்னு சொன்னேன்.

எல்லோருக்கும் கஷ்டகாலம் வரும் போகும். அதேமாதிரி இந்தப்படத்தோட உங்களோட கஷ்டகாலமெல்லாம் முடிஞ்சுப் போச்சு, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடையணும், ரசிகர்கள் இந்தப்படத்தை வெற்றியடைய வைக்கணும்.”என்று ரஜினி பேசினார்.

படத்தின் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, ‘இந்தப் படத்தில் கமலுக்கு சம்பளம் 27 ஆயிரம் ரூபாய். பரட்டை கேரக்டரில் நடிப்பதற்காக ஆள் தேடியபோது, ரஜினி கிடைத்தார். 5 ஆயிரம் சம்பளம் கேட்டார். 3 ஆயிரம் பேசி, 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தோம். 500 ரூபாய் பாக்கி இருக்கிறது. இதன் ஷூட்டிங்கில் கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும்தான் இளநீர் கொடுப்பார்கள். ரஜினிக்கு அது கூட தந்ததில்லை. அந்த நினைவுகள் இப்போது என் கண்முன் நிழலாடுகிறது. “என்று பாரதிராஜா பேசினார்.

<kodankistrong>கோடங்கி