October 18, 2021

நடிகர் சிவகுமாரின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் ‘Golden Moments of Sivakumar in Tamil Cinema’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனஞ்ஜெயன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், சிவகுமாரைப் பற்றி ‘தி இந்து’ மாலதி ரங்கராஜன், தேவிமணி, சுதாங்கன், மோகன்ராமன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் ராம்ஜி உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் தங்களுடைய பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து ‘Golden Moments of Sivakumar in Tamil Cinema’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் பேசிய சிவகுமார், “சினிமா என் அம்மா. அவள் என்னைக் கைவிடமாட்டாள். என்னுடைய 150வது படத்தில் தான் 1 லட்ச ரூபாய் சம்பளமே வாங்கினேன். ஒரு நடிகனுக்கு முகம் நன்றாக இருக்கும் போதே, நடிப்பை நிறுத்திவிட வேண்டும் என்பதால் நடிப்பை நிறுத்திவிட்டேன். நான் பெரிய நடிகன் என்று எப்போதுமே சொல்லிக் கொண்டதில்லை. வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டு தான் இந்நிலைக்கு வந்திருக்கிறேன். என்னுடைய 14 வயது முதல் 24 வயதிற்குள் வாழ்க்கையின் முழுவதும் வரைந்திருக்க வேண்டிய ஓவியங்களை வரைந்து முடித்துவிட்டேன். இதனை நான் கர்வத்துடனும், பெருமையுடனும் சொல்லிக் கொள்வேன்.

எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த பத்திரிகையாளர்கள், எனது மகன்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். சூர்யாவின் காதல் திருமணம் பற்றியும் எழுதினார்கள். அது நடந்தது, அவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அது போதும் எனக்கு. இப்போதெல்லாம் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் மாறிவிட்டது. பெரும்பாலான திருமணங்கள் அடுத்த நாள் காலையில் பிரிந்து விடுகிறார்கள்.

காலப்போக்கில் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்பதே இருக்காது. இனிமேல் காதல் திருமணங்கள் தான் ஜெயிக்கும். ஆண் – பெண் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரியும் போது பழகுகிறார்கள். அப்படிக் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள், சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும். அப்படிப்பட்டவர்களை நான் கையெடுத்துக் கும்பிடத் தயாராக இருக்கிறேன். என் இத்தனை வருட வாழ்க்கையில் நான் வரைந்த ஓவியங்களை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

சூர்யா பேசும் போது, “மிகப்பெரிய ஜாம்பவான்கள் வீட்டில் இருக்கும் போது அவர்கள் மதிப்பு தெரியாது என்று சொல்வார்கள். என் அப்பாவை மற்றவர்கள் மதித்துக் கொண்டாடும் போதுதான், அவருடைய மதிப்பு எனக்கு தெரிகிறது. என்றைக்குமே அவர் நான் இவ்வளவு சாதித்துவிட்டேன் என்று தன்னுடைய எண்ணங்களை எங்கள் மீது திணித்தது கிடையாது. அவர் அன்றாடம் நடந்துகாட்டுகின்ற விதம்தான் எங்களை வழிநடத்தி வருகிறது.

அப்பா வரைந்த ஓவியங்களைப் பார்க்கும்போது, கஷ்டப்பட்டு ஓவியக் கல்லூரியில் படித்த அந்த ஏழை மாணவனின் வெறித்தனம்தான் தெரிகிறது. அப்பா எப்போதுமே, எந்த விஷயத்தையுமே எளிதாக எடுத்துக் கொண்டதில்லை. அந்த காலத்தில் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து சாதித்தார். ஒரு ஓவியனாக, நடிகனாக, சொற்பொழிவாளனாக, குடும்பத் தலைவனாக சாதித்துக் காட்டியிருக்கிறார். எப்போதுமே அவர் பணத்துக்கும், புகழுக்கும் அடிமையானதே இல்லை.

சினிமாவில் நன்றாக இருந்த காலகட்டத்திலேயே, சினிமாவைத் தவிர்த்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த மனநிலை வேறு யாருக்கும் வருமா என்பது சந்தேகம்தான். நாள்தோறும் புதுப்புது விஷயங்கள் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுவார். அந்த விஷயத்தில் அப்பாவை நாங்கள் மிஞ்ச வேண்டும் அல்லது அவருக்கு சமமாக நடக்க வேண்டும் என நானும், கார்த்தியும் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் இந்த இடத்தை நாங்கள் அடைந்திருந்தாலும், சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. அப்பாவைப் பார்த்து பல விஷயங்களில் வியந்திருக்கிறேன். அதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், அவருக்கு 500க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். அனைவருடனும் நல்ல நட்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதனைப் பார்த்து பிரமிப்பாக இருக்கிறது. பொறாமையாகவும் இருக்கிறது. மகாபாரதம், ராமாயணம் என்பதைத் தாண்டி இன்னும் பல அரிதான விஷயங்களை செய்து சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய கார்த்தி, “அப்பா வரைந்த ஓவியங்களை நிரந்தரக் கண்காட்சியாக வைக்க முடிவு செய்திருக்கிறோம்” என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்