October 19, 2021

காதி நிறுவனத்துக்கு என பிரத்யேக இணையதளம்!

இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிய போராட்டங்களில் முக்கியமானது காதிப் போராட்டம். பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு தந்து வாழ்வாதாரமாக இருந்தது காதி. ஓர் காதி ஆடையை உருவாக்க தேவைப்படும் நேரம் கைத்தறியிலிருந்து உருவாக்கப்படும் ஆடையை விட அதிகம் தான். ஆனாலும் காதி நம் கலை மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய சின்னம், அடையாளம். ஆக நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட துணியாக மட்டும் காதி துணிகளை பார்க்க முடியாது. அது அந்த காலக்கட்டத்தில் தேசத்தின் அடையாளமாகவும், இந்தியாவால் பொருளாதார வளர்ச்சி அடைய முடியும் என்றும், சுதேசி சிந்தனையுடன்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் ஆங்கிலேயர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தன காதி தயாரிப்புகள்.

kadhi oct 17

இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காதி தயாரிப்புகள் சுதந்திரம் பெற்ற பிறகு மிகப் பெரிய அளவிற்கு வளர்ச்சியடையவில்லை. புதிய பொருளாதார கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு வெளிநாட்டு தயாரிப்புகள் இந்தியா வந்து குவிந்தன. இதனால் காதி தயாரிப்புகளின் விற்பனை கடுமையாக பாதிப்படைந்தது. பெரும் சரிவை கண்டு வந்த காதி நிறுவனம் தற்போது மீண்டும் சிறிது சிறிதாக உயிர்பெற்று வருகிறது. காதி பொருட்கள் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதி தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் வகையில் இந்தி நடிகரான சல்மான் கான், நடிகை சோனம் கபூர் ஆகியோர் காதி நிறுவனத்தின் தயாரிப்புகளை அணிந்து பேஷன் ஷோவில் கலந்து கொண்டனர். பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் காதி ஆடைகளை வடிவமைத்து கொடுத்து வருகின்றனர். மிகப் பெரிய நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் காதி மற்றும் கிராமப்புறத் தொழில்கள் நிறுவனம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதற்கான பிரத்யேக இணையதளத்தை காதி நிறுவனம் விரைவில் தொடங்க உள்ளது. இ-பே, அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல், மிந்த்ரா என இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இணைய வர்த்தகச் சூழல் அதிகரித்து வரும் நிலையில் காதி வாரியம் இணையதள வர்த்தக சேவையை தொடங்க உள்ளதாகத் அறிவித்துள்ளது. இதற்கான பரிந்துரையை மத்திய சிறு, குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்திடம் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் (KVIC) அளித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்துக்கான பிரதேயேக இணையதளம் அடுத்த மாதத்தில் தொடங்கப்படும் என்று அந்த வாரியத்தின் தலைவர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார். இணையதளத்தினை வடிவமைக்கும் இறுதிக் கட்ட பணிகள் நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், காதியில் கிடைக்கும் பொருட்களின் விலைப் பட்டியல் தயாரிப்பு, பொருள்களின் புகைப்படங்கள், சேமிப்பு கிடங்கு, கட்டணம், கூரியர் ஒப்பந்தங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் சக்சேனா தெரிவித்தார். இதன்மூலம் தனியார் இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு இணையாக காதி நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.