சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் & ரூ.25 ஆயிரம் அபராதம் – புதுவை போலீஸ் அறிவிப்பு
நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டுவது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் அருந்தி வாகனங்கள் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது தமிழக காவல்துறை. மேலும் சிறுவர்கள் மூலம் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளது. தற்போது புதுச்சேரி அரசும் அதிரடியான அறிவிப்பை இன்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் இன்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து புதுவை போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ:
புதுவையில் சமீபகாலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. இவர்கள் வாகனத்தை இயக்க சட்டப்படி அனுமதி இல்லை. இச்சிறுவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் வாகனத்தை ஓட்டுவதாக தெரிகிறது. இவ்வாறு வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 3 வருடம் வரை சிறை தண்டனையும் மற்றும் ரூ.25,000/-அபராதமும் மற்றும் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் 12 மாதம் வரை ரத்து செய்யப்படும். மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்படும். எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதுவையில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஒட்டுவது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுதல் (ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்), கைப்பேசி பேசிக்கொண்டு வாகன ஓட்டுதல், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கின்போது இயக்குதல், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், சரக்கு வண்டிகளில் நபர்களை ஏற்றிச் செல்வது, சரக்கு வண்டிகளில் அதிக சுமை ஏற்றுதல் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டிகள் தங்களது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருத்தல் கட்டாயம் அல்லது டிஜிலாக்கர் (Digilocker) அல்லது பரிவாஹன் (Parivahan) மூலம் ஓட்டுநர் உரிமத்தை காட்டுதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். முந்தைய அபராத விவரப்படி தலைக்கவசம் இன்றியும். கைபேசி பயன்படுத்தி விதிமீறல்கள் அதிகம் பதிவாகியுள்ளது. வாகனம் ஓட்டும்போது கைபேசியில் பேசுவோருக்கும், தலைக்கவசம் அணியாது இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கும் முதல் முறை ரூ.1000/- அபராதம் மட்டுமன்றி 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.