March 31, 2023

உ.பி.யில் நடந்த தீப ஒளிவெள்ளக் காட்சிகள்! – கின்னஸ் சாதனை – வீடியோ!

தீபம் என்றால் ஒளி விளக்கு ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். அதை நினைவில் கொண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி (இன்று) வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இறுதி நாளான இன்றிரவு அயோத்தி நகரில் சரயு நதிக்கரையில் 3 லட்சத்து ஓராயிரத்து 152 அகல் விளக்குகளை ஏற்றி உற்சாகமாக தீப ஒளி கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

இந்துக்கள் தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். *இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும்போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். *புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன். அப்போது கிருசுணன் வராக (பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனது திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறார். கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்றபோது அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது. இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்துவிட்டு மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப்படுகிறது.

இதையொட்டி கின்னஸ் சாதனையாக நடந்த தீபங்களின் ஒளிவெள்ளத்தில் அயோத்தியா நகரம் ஜொலிக்கும் இந்த தீபோத்சவம் காட்சியை கண்டு உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அம்மாநில கவர்னர், துணை முதல் மந்திரி உள்ளிட்ட இதர மந்திரிகள் மற்றும் இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் களித்தனர்.

மேலும், இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாகவும் மாறியுள்ளது. இதை காண வந்திருந்த உலக சாதனை புத்தகமான கின்னஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த சாதனையை அங்கீகரிக்கும் சான்றிதழை உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்திடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.