3 ம் உலகப் போர் மூண்டது என்ற அத்தியாயம் …?

3 ம் உலகப் போர் மூண்டது என்ற அத்தியாயம் …?

க்ரைனில் நடந்து கொண்டிருக்கும் கலவரத்தின் பின்னணியில் ரஷ்யா மட்டும் இருப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் மிகப்பெரிய ‘பொய்’ பிரச்சாரத்தை கட்டவிழ்த்து வருவதை பார்க்கிறோம். இந்தப் போர் பதட்டம் 100 நாட்களைத் தாண்டி விட்டதே இதை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்ற கேள்விக்கு விடையைத் தேட சில நாடுகள் மட்டுமே யோசித்து வருகிறது.

ஆனால் ஐ.நா.வின் ஜாம்பவான் நாடாக இருக்கும் அமெரிக்காவும் அவர்களது ‘கைப்பாவை’ ஐ.நா.சபை அங்கத்தினர் நாடுகளாக இருக்கும் பிரான்சும் பிரிட்டனும் இப்பிரச்சனைக்குத் தீர்வு என்று யோசிக்காமல் இக்குழப்பம் தொடரட்டும் என்று தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது கவலை தருகிறது. தள்ளி நின்று மவுனமாக இருக்காமல் எரியும் நெருப்பில் எண்ணை விட்டு தீயை அணைக்காமல் மாறாக படர விட்டு அல்லவா வருகிறார்கள்.

அமெரிக்காவுடன் இணைந்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை அறிவித்தனர். ரஷ்யா மீது தடை அறிவிக்காத நாடுகளை பகை நாடாக பார்க்க ஆரம்பித்தும் வருகிறார்கள். இவர்களது பொருளாதார தடையால் ரஷ்யாவிற்கு என்ன சங்கடம் என்று தெரியவில்லை. ஆனால் உலக வர்த்தகம் பாதித்து விட்டது. விமான சர்வீஸ்கள் இயங்காத நிலை ; சரக்கு கப்பல் போக்குவரத்தும் பாதிப்படைந்து விட்டது; உணவுப் பொருட்கள் வீணாகி வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்காவின் பண வீக்கம் 1970ல் எட்டிய உயரத்தில் தற்போது உள்ளது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக 8.6%ஆக இருக்கிறது. நிலமையைச் சமாளிக்க வங்கிக் கடன் வட்டிகளை உயர்த்தியாகத் தான் வேண்டும். பெட்ரோல் விலை உயர்வு, வங்கி வட்டிகள் உயர்வு எனச் சாமானிய அமெரிக்க பொதுமக்கள் மிகப்பெரிய நிதிச் சுமையைச் சமாளித்து வருகிறார்கள்.

ஆனால் எது எப்படிப் போனாலும் ரஷ்யாவை விட்டேனா பார்…! என்று அமெரிக்க ஜனாதிபதி பிடன் செயல்பட்டு கொண்டிருப்பது விந்தையாகத்தான் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவும் ஒரே குரலாக உக்ரைன் படையெடுப்பை ரஷ்யா நிறுத்த வேண்டும். அது தான் தீர்வு என்று கூறுகிறார்கள். ரஷ்யாவோ கேட்டது ஒன்றைத் தான் எங்களது எல்லைப்புற நாட்டை நாட்டோ வியாப்பித்து விட்டால் எங்களது சுதந்திரம் பறி போகும். எங்களது தனித்துவத்தை இழந்து நாட்டோ அமைப்பின் அடிமையாக மாறித்தான் ஆக வேண்டுமா? இது போன்ற சிக்கல்கள் சில நாட்களில் புதிய கோணத்தில் மேலும் வீரியம் கொண்டு அணு ஆயுத போராக மாறும் என்பதை உணர்ந்தாக வேண்டும்.

இரு தரப்பிலும் எல்லா ராணுவ தளவாடங்களும் போர் உபயோகத்திற்கு தயாராக இருப்பதை பார்க்கும்போது உலகப் போர் அச்சம் மேலோங்குகிறது. போப் ஆண்டவர் கடந்த மாதம் ஒரு பேட்டியில் தான் இன்றைய நடப்புகளை 3 ம் உலகப்போர் ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது என்று வேதனை தெரிவித்திருந்தார். இப்படி ஓர் இருக்கமான போர் தருணத்தில் இந்த யுத்த நிகழ்வு தொடராது நிறுத்த யாரும் எந்த நடவடிக்கைகையும் எடுக்காததையும் சுட்டிக் காட்டியிருந்தார். போரில் அவதிப்படும் அப்பாவி சாமானியனின் பரிதாப நிலையை உணர்ந்து இந்த யுத்தத்தில் புதுப்புது ராணு தளவாடங்களைப் பரிசோதித்து செயல்பட வைக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஷ்யாவின் ஒரே குற்றச்சாட்டு உக்ரைன் ‘நாட்டோ’ அமைப்பில் சேரக் கூடாது. இது பற்றிய முடிவை நாட்டோ அமைப்பு இதுவரை ஏன் சரிவர எடுக்காது, இப்பிரச்சனையை நீடிக்க வைத்து வருகிறது என்பதை பார்க்கும் போது இது ஒரு சிலர் களடங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல் அல்லவா இருக்கிறது. அடுத்த 10 நாட்களில் ஸ்பெயின் நாட்டில் ‘நாட்டோ’ அமைப்பின் மாநாடு நடைபெற இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி பிடன் அதில் பங்கேற்க செல்வது உறுதி என்று கூறியுள்ளார்.

ஜூன் 29, 30 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் நாட்டோ மாநாட்டில் ரஷ்யாவை மேலும் கோபமூட்டும் வகையில் உக்ரைனுக்கு சாதகமாக பேசி மேலும் ரஷ்யாவை பலி வாங்கும் நிலைப்பாட்டை அறிவிக்கலாம். இப்படியே தொடர்ந்தால் வரலாற்றுப் பக்கத்தில் 3 ம் உலகப் போர் மூண்டது என்ற அத்தியாயம் எழுதப்படும்.

சற்றே பொறுப்புணர்வுடன் சிந்தித்து ரஷ்யா மீது துவேச பேச்சுக்களைக் குறைத்துக் கொண்டு பற்றி எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி வளர விடாமல் அமைதிக் குளிர் காற்று வீச வழி வகுத்து வரவிருக்கும் போர்த் தீயை அணைப்பது தான் உத்தமமான முடிவாக இருக்கும்.

ஆர். முத்துக்குமார்

Related Posts

error: Content is protected !!