September 17, 2021

2 ஜி வழக்கின் தீர்ப்பு தேதி – 20ம் தேதி அறிவிப்பு!

2007-ல், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு, ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில், 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்கப்பட்டது.  அதில், பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, சிபிஐ 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து, வழக்கு விசாரணையைத் தொடங்கியது. இதையடுத்து, 2010-ம் ஆண்டு நவம்பரில், ஆ.ராசா மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க, சிபிஐ தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, ஓ.பி.ஷைனி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆ.ராசா, தி.மு.க எம்பி., கனிமொழி, தயாளுஅம்மாள் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.

இவர்கள் மீது மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், இரண்டை சிபிஐ-யும், ஒன்றை அமலாக்கப் பிரிவும் தாக்கல் செய்தது. இந்த வழக்கின் இறுதி வாதம் முடிவடைந்ததை அடுத்து தற்போது தீர்ப்பு குறித்த அறிவிப்பை நீதிபதி வெளியிட்டுள்ளார்.