October 19, 2021

விவசாயி பொண்ணான எம்.எஸ்.ஸி. கம்யூட்டர் சயின்ஸ் ஸ்டூடண்ட்!

பெண்கள் இன்று களம் காணாத துறைகள், களங்களே இல்லை. அதில் விவசாயமும் விதிவிலக்கல்ல. மதுரை அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு குரூப்-2 அரசு தேர்வுக்கு தயாராகும் தனலெட்சுமி(23), வீட்டுக்கு வருமானம் தேடித் தரும் வகையில் விவசாயம் செய்யத் தொடங்கிவிட்டார்.இவரது தந்தை மனோகரன். தாய் சரோஜா. தம்பி தீபன். மனோகரன், மதுரை தனியார் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிகிறார். இவர் ஒருவரின் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாததால் மகன் தீபனை படிக்க வைக்க முடியவில்லை. தனலெட்சுமி மட்டும் குடும்ப வறுமையிலும் படிப்பை விடாமல் கஷ்டப்பட்டு படித்து கடந்த ஆண்டு எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். படிப்பு முடிந்ததும் வழக்கமான பெற்றோரை போல் தனலெட்சுமி பெற்றோரும், அவரை வேலைக்கு அனுப்பியுள்ளனர். மதுரையில் தனியார் கம்பெனியில் ரூ.7,500 ஊதியத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார். பேருந்து பயணக் கட்டணம், கைச்செலவு போக கையில் எதுவும் மிஞ்சவில்லை. அதனால், அந்த வேலையை உதறிவிட்டு தற்போது சொந்த ஊரிலேயே தனலெட்சுமி விவசாயம் செய்யத் தொடங்கிவிட்டார்.
ladfy-jan-8
இதுகுறித்து தனலெட்சுமி கூறியதாவது: எங்கப்பா, அம்மாவுக்கு விவசாயம் செய்ய ஆசை. ஆனால் சொந்த நிலம் கிடையாது. நான் சிறிய வயதாக இருக்கும்போது, எங்கள் ஊர் பக்கம் ஒருவரிடம் ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து எங்கப்பா விவசாயம் செய்தார். பள்ளி விடுமுறை நாட்களில் அம்மாவுடன் நானும் வயலுக்குச் செல்வேன். அப்போது அவர்களும், வேலைக்கு வந்தவர்களும் களை எடுப்பது, நாற்று நடுவதைப் பார்த்து நானும் செய்வேன். விளையாட்டாக செய்த விவசாயத்தை இப்போது முழுமையாக கற்றுக்கொண்டேன்.

ஒரு கட்டத்தில் எங்கப்பா, விவசாயத்தில் லாபம் கிடைக் காததால் பேருந்து நடத்துநர் பணிக்கு சென்றுவிட்டார். விவசாயத்தை விட மனமில்லாமல் நானும், எங்கம்மாவும் இப்போது செய்கிறோம். எனக்கு விவசாயம் செய்யதான் ஆசை.பெரும்பாலான நேரம் வீட்டில் சும்மா இருப்பதால் எங்கம்மாவுடன் சேர்ந்து விவசாயம் செய்கிறேன். களையெடுக்க, நாற்று நட ஆட்களை கூப்பிட்டால் அவர்கள் 3 மணி நேரம்தான் வேலை பார்ப்பார்கள். அதற்கு ரூ.200 சம்பளம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வந்து போக பேருந்து கட்டணம், டீ, வடை வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 10 பேர் வந்தால் ரூ.1500 செலவாகும். 3 மணி நேரத்துக்கு மேல அவர்கள் ஒரு நிமிடம்கூட வயலில் நிற்கமாட்டார்கள். வரப்பை விட்டு மேலே ஏறிவிடுவார்கள். ஒரு ஏக்கரில் 40 மூட்டை நெல் கிடைக்கும். இதில் 10 மூட்டையை நிலத்தின் சொந்தக்காரருக்கு குத்தகையாக கொடுக்க வேண்டும். இதுபோக உரம், மருந்து செலவை கணக்கிட்டால் போட்ட முதலை எடுப்பதே சிரமம். அரிசி விலை உச்சத்தில் இருந்தாலும் விவசாயிகளுக்கு உற்பத்தி செய் யும் நெல்லுக்கு விலை கிடைப்ப தில்லை. எங்களிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கும் நெல் வியாபாரிகளுக்குதான் லாபம். சொந்த நிலத்தில் திட்டமிட்டு விவசாயம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்காலத்தில் சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்.

இன்று விவசாய நிலங்கள் எல்லாம் கல் முளைத்த கட்டிடங் களாக மாறி வருகின்றன. மக்கள் தொகை பல மடங்கு பெருகி வருகிறது. எவ்வளவோ ஆராய்ச் சிகள், கண்டுபிடிப்புகள் நடக்கிறது. இவற்றுக்கெல்லாம் அடிப்படை தேவை உணவுதான். உணவில் லாமல் எந்த கண்டுபிடிப்புகள், ஆராயச்சிகளாலும் பயனில்லை என்றார்.