October 25, 2021

வெளிநாடுகளில் இருந்து அதிக பணவரத்து பெறும் நாடுகளில் இந்தியா டாப்!

வெளிநாடுகளில் இருந்து அதிக பணவரத்து பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ள அந்த வங்கியின் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை:
india2
சர்வதேச அளவில் வெளிநாடுகளில் இருந்து அதிக பணவரத்து பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நிகழாண்டில் மட்டும் வெளிநாடுகளிலிருந்து சுமார் ரூ.4.77 லட்சம் கோடி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதற்கு அடுத்தபடியாக, சீனாவுக்கு ஆண்டுக்கு ரூ.4.24 லட்சம் கோடி பணம் அனுப்பப்பட்டிருக்கிறது. பிலிப்பின்ஸ் நாட்டுக்கு ரூ.1.98 லட்சம் கோடி அனுப்பப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், பொருளாதாரத்துக்காக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு புலம்பெயர்ந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புலம்பெயர்ந்து சென்ற நாட்டில் தாங்கள் ஈட்டிய தொகையின் பெரும் பகுதியை தங்கள் சொந்த நாட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அவர்கள் அனுப்பி வைக்கின்றனர். அவ்வாறு, மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் (ரூ.3.71 லட்சம் கோடி), சவூதி அரேபியா இரண்டாமிடத்திலும் (ரூ.2.45 லட்சம் கோடி), ரஷியா மூன்றாமிடத்திலும் (ரூ.2.18 லட்சம் கோடி) இருக்கின்றன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் உள்ள வங்கிகளில் வெளிநாட்டு இந்தியர்களின் டெபாசிட் கடந்த ஆறு மாதங்களில் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 1000 கோடி டாலர் வரை வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளனர். பல்வேறு டெபாசிட்களில் இதுவரை வெளிநாட்டு இந்தியர்கள் 12 ஆயிரத்து 100 கோடி டாலர் டெபாசிட் செய்துள்ளனர். இது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்க பெரிதும் உதவும் என்று வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.