January 29, 2022

234 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்யுலே! – அன்புமணி அப்செட்

தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக, திமுகவினர் பண விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, 234 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்றால், தொகுதியை அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவருக்கு வழங்கிவிடாலம் என ஆதங்கத்துடன் கூறினார்.

anbumani mar 15

சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து, பண விநியோகம் குறித்து புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 மாதங்களாக மக்களைச் சந்தித்து தேர்தலுக்காக ஆதரவு திரட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணத்தை வழங்கி வருகின்றனர்.
ரூ. 500 முதல் ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த கேவலமான கலாச்சாரம் தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது.

கருணாநிதி போட்டியிடும் திருவாரூர், ஜெயலலிதா போட்டியிடும் ராதாகிருஷ்ணன் நகர், ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் உள்பட அனைத்துத் தொகுதிகளிலும் பணம் விநியோகிக்கப்படுகிறது.தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்றால், தொகுதியை அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவருக்கு வழங்கிவிடாலம். அதிகாரம் இல்லாத ஆணையமாக தேர்தல் ஆணையம் உள்ளது. பல புகார் மீது நடவடிக்கை இல்லை.

எனவே, தமிழகத்தில் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு, வெளி மாநில அதிகாரிகளைக் கொண்டு நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் வெளிமாநில அதிகாரிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமித்து தேர்தலை நடத்த வேண்டும்.திருப்பூரில் பிடிப்பட்ட ரூ. 570 கோடி பணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” என்றார் அன்புமணி.

முன்னதாக இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாகவே வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. பண வினியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கடந்த தேர்தலின் போது வாக்குப்பதிவுக்கு இரு நாட்கள் முன்பாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி தடையின்றி பண வினியோகம் செய்ய தேர்தல் ஆணையம் உதவி செய்தது.

இந்த ஆண்டு சோதனைச்சாவடிகளை திறந்து வைத்து வாக்காளர்களுக்கு தருவதற்கான பணத்தை தடையின்றி கொண்டு செல்ல ஆணையம் உதவி செய்கிறது.தமிழகத்தில் இந்த அளவுக்கு பண வினியோகம் நடைபெற்ற பிறகு தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்புக்கள் இல்லை. எனவே, தமிழக சட்டமன்ற தேர்தலை ஒத்தி வைத்து, நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகு வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.