July 29, 2021

ஆக்சிஜன் வாயு கசிந்து கொரோனா பேஷண்ட்ஸ் 22 பேர் மரணம்!- வீடியோ

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் தொழில்துறைக்கான ஆக்ஸிஜன் உற்பத்தியை ஒப்பிடுகையில், மருத்துவத்திற்கு 0.4 சதவிகித ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக்கில் உள்ள ஜாகீர் உசேன் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க, டேங்கர் லாரியில் ஆக்சிஜன் நிரப்பும் பணி நடைபெற்றது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவு காரணமாக கொரோனா நோயாளிகள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நாசிக் நகரில் ஜாகீர் ஹுசைன் நகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்வதற்காக ஆக்சிஜன் டேங்கர் லாரி இன்று வந்தது. மருத்துவனையில் உள்ள ஆக்சிஜன் டேங்கருக்கு, லாரியிலிருந்து ஆக்சிஜனை மாற்றும்போது திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக ஆக்சிஜன் சப்ளை துண்டிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் ஐசியூ வார்டில் கரோனா நோயாளிகள் பலர் ஆக்சிஜன் சிகிச்சையுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

ஆனால் திடீரென ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்தும் இந்த கசிவின்போது அருகிலிருந்த நோயாளிகளை காப்பாற்ற அவர்களது உறவினர்கள் முயன்றபோதும், 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பத்தின் காரணமாக அப்பகுதியில் 30 நிமிடங்களுக்கு ஆக்சிஜன் வெண்புகையை போல் சூழ்ந்திருந்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். முதல் பணியாக ஆக்சிஜன் சப்ளையை லாரியிலிருந்து நிறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தற்போது 80 கொரோனா நோயாளிகளில் 31 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மஜீத் மேமோன் தெரிவித்துள்ளார்.முன்னதாக மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.