சட்டே மேலே எவ்ளோவ் பட்டன்!- வேட்பாளர்களில் இம்புட்டு கிரிமினல்களா?!

குற்றப்பின்னணி இல்லாத அரசியல்வாதிகளே இல்லை, குற்றவாளிகளாய் இருப்பது மட்டும் தான் நாட்டை ஆள்வதற்கு அடிப்படை தகுதி என்று ஆகிவிட்ட நம் நாட்டில் வருகிற 11ம் தேதி நடக்கும் முதற்கட்ட தேர்தல் 91 தொகுதியில் நடக்கும் நிலையில், மொத்தம் போட்டியிடும் 1,279 வேட்பாளர் களில் 213 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், அதிகபட்சமாக காங். கட்சியை சேர்ந்தவர்கள் மீது பதிவாகி உள்ளது. அதேபோல் மொத்த வேட்பாளர்களில் 401 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

பார்லிமெண்ட் தேர்தல் தேதி அட்டவணையின்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு வருகிற 11ம் தேதி தொடங்கி 7ம் கட்ட வாக்குப்பதிவு மே 19ம் தேதியுடன் நிறைவுபெற்று, வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது.அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 11ம் தேதி 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கு நடக்கிறது. ஆந்திரா – 25, அருணாசலப்பிரதேசம் – 2, அசாம் – 5, பீகார் – 4, சட்டீஸ்கர் – 1, ஜம்மு காஷ்மீர் – 2, மகாராஷ்டிரா – 7, மணிப்பூர் – 1, மேகாலயா – 2, மிசோரம் – 1, நாகலாந்து – 1, ஒடிசா – 4, சிக்கிம் – 1, தெலங்கானா – 17, திரிபுரா – 1, உத்தரபிரதேசம் – 8, உத்தரகாண்ட் – 5, மேற்குவங்கம் – 2, அந்தமான் நிக்கோபார் – 1, லட்சத்தீவு – 1 என, 91 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது.மேற்கண்ட மாநிலங்களில் நடக்கும் முதற்கட்ட தேர்தலுடன், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. அதன்படி, ஆந்திராவில் 175 தொகுதிகள், சிக்கிமில் 32 தொகுதிகள், அருணாசலப்பிரதேசத்தில் 60 தொகுதிகளுக்கு மட்டும் ஒரே கட்டமாவும், ஒடிசாவுக்கு மட்டும் 3 கட்டங்களாகவும் நடக்கிறது.

முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மத்திய மாநில ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இந்நிலையில், 91 மக்களவை தொகுதியில் நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 213 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிபரங்களில் தெரிவித்துள்ளது.அதன்படி, முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,279 வேட்பாளர்களில் 1,266 பேர் ‘அபிடவிட்’  தாக்கல் செய்து உள்ளனர். இதில் 213 வேட்பாளர்கள் மீது கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கடுமையான குற்றங்களுக்கு எதிராக குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.வேட்பாளர்கள்  தாக்கல் செய்த ‘அபிடவிட்’டை ஆய்வு செய்து, தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இதில், 213 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டாலும், மீதமுள்ள 13 வேட்பாளர்களின் வாக்குமூலங்கள், முறையான ஸ்கேன் செய்யப்பட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்கள் கிடைக்காததால் முழுமையான தகவல்கள் பெறப்படாத நிலையுள்ளது.கிரிமனல் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில், மொத்தமுள்ள வேட்பாளர்களில்  1 சதவீத வேட்பாளர்கள்  தீவிர குற்றவியல் வழக்குகள் தங்களுக்கு எதிராக உள்ளதாக அபிடவிட்டில் கூறி உள்ளனர். இதில், 12 சதவீதம் பேர்  தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள்; 10 வேட்பாளர்கள் மீது கொலை  வழக்கு; 25 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு; 4 வேட்பாளர்கள் மீது கடத்தல் வழக்கு; 16 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்கு; 12 வேட்பாளர்கள் மீது அவதூறாக பேசியது போன்ற பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இவர்களில் பாஜ கட்சியைச் சேர்ந்த 83 வேட்பாளர்களில் 30 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் 83 வேட்பாளர்களில் 35 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன.அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் 35 பேரில் 8 பேர் மீதும், ஒய்எஸ்ஆர் கட்சி வேட்பாளர்கள் 25 பேரில் 13 பேர் மீதும், தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் 25 பேரில் 4 பேர் மீதும், தெலங்கானா ராஷ்டீரிய சமிதி வேட்பாளர்கள் 17 பேரில் 5 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.

முதற்கட்டமாக நடக்கும் 91 தொகுதிகளில் 31 தொகுதிகள் பதற்றமான தொகுதிகளாக அறிவிக்கப் பட்டு உள்ளது.மேலும், மொத்த வேட்பாளர்களில் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் காங்கிரஸ் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் 83 வேட்பாளர்களில் 69 பேர் கோடீஸ்வரர்கள்.அடுத்ததாக பாஜ கட்சியின் 83 ேவட்பாளர்களில் 65 பேர் கோடீஸ்வரர்கள், பகுஜன் சமாஜ் கட்சியில் 32 வேட்பாளர்களில் 15 பேர் கோடீஸ்வரர்கள், தெலுங்கு தேசம் கட்சியில் போட்டியிட்ட 25 பேருமே கோடீஸ்வரர்கள், ஒய்எஸ்ஆர் கட்சியில் 25 பேரில் 17 பேர் கோடீஸ் வரர்கள் என, 401 வேட்பாளர்கள் 1 கோடி ரூபாய் முதல், 5 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்து கணக்கை சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.