September 29, 2021

அதிக நேரம் உடற்பயிற்சி மற்றும் ஓட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆபத்து!

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்பு, குத்துச்சண்டை, ஆகியவற்றை வாலிபர்கள் கற்றுக் கொண்டு உடலமைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சிகள் வந்தன. தற்போது ஜிம்மில் 5 முதல் 10 மணி வரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உடலமைப்பை உருவாக்குவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இது போன்ற உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதுவே அளவுக்கு மிஞ்சினால் “செப்சிஸ்’ எனப்படும் “ரத்தம் நச்சுத் தன்மை அடையும் நோய்’ ஏற்படும் என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
excersice warn
இந் நோயின் காரணமாக ரத்த ஓட்டத்தில் பாக்டீரியா கிருமிகள் மற்றும் நச்சுப் பொருட்கள் கலந்து, ரத்தம் உறைதல், ரத்தப் போக்கு, உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ஆக்சிஜன் மற்றும் நுண்ணூட்டங்கள் கிடைப்பது தடைபடும். நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு உடல் பலவீனம் அடைந்தவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் செப்சிஸ் நோயால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்க சுகாதார நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாள் ஒன்றுக்கு 20 நிமிடம் மிதமான உடல் பயிற்சி மேற்கொண்டாலே போதும் என்கிறது. சற்று கடினமான பயிற்சி என்றால் நாள் ஒன்றுக்கு 10 அல்லது 15 நிமிடமே போதும் என்று திட்டவட்டமாக கூறுகிறது. மேலும், அந்த நிறுவனம் மராத்தான் ஓட்டத்தில் பங்கெடுத்தவர்களின் ரத்தத்தை எடுத்து பரிசோதித்ததில் பெரும்பாலானவர்களுடைய ரத்தத்தில் “செப்சிஸ்’ நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டதாக தெரிவிக்கிறது.

அதிக நேரம் உடற்பயிற்சி மற்றும் ஓட்டத்தில் ஈடுபடுபவர்களின் குடல் பாதிக்கப்பட்டு “என்டோடாக்ஸின்’ எனப்படும் பாக்டீரியாவால் உண்டாக்கப்படும் நச்சுப்பொருள் ரத்தத்தில் கலந்து “செப்சிஸ்’ நோய்க்கு காரணமாக இருப்பதும் ஆராய்ச்சி முடிவில் கண்டறியப்பட்டது. எதிர்காலத்தில் அதிக உடல் பயிற்சியால், குடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், குடலுக்கு தீமை ஏற்படுத்தாத உடற்பயிற்சி முறைகளை கண்டறியவும் திட்டமிட்டுள்ளது.